×

கர்ப்பத்துக்கு நீதான் காரணம் என கூறி 3வது திருமணம் செய்ய வற்புறுத்திய 8 மாத கர்ப்பிணி குத்திக்கொலை: 21 வயது கள்ளக்காதலன் வெறிச்செயல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே கோனேகவுண்டனூர், வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த வேப்பனஹள்ளி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்த பெண் பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகள் ஷாலினி(25) என்பதும், 8 மாத கர்ப்பிணி என்பதும், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பட்டாவால் கழுத்து இறுக்கியும் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. ஷாலினியின் குடும்பத்தினர், அவரை கடந்த 19ம்தேதி முதல் காணவில்லை என்றும், அவரை தேடி வந்ததாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த 19ம்தேதி அப்பகுதி செல்போன் சிக்னலில் பதிவாகி இருந்த நம்பர்கள் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர். அதில், பந்திகுறி கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (21) மற்றும் கிருஷ்ணகிரி அருகே பெரியஅக்ரஹாரத்தை சேர்ந்த புகழேந்தி (19) என்பவர்களின் செல்போன் எண்கள் என தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மேகநாதனுக்கும், ஷாலினிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும், இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் மேகநாதன் நண்பர் புகழேந்தி உதவியுடன் ஷாலினியை கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசாரிடம் கள்ளக்காதலன் மேகநாதன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: ஷாலினிக்கும், மதியழகன் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பின்னர் ஷாலினி கணவரை பிரிந்து வேப்பனஹள்ளி அருகே பந்திகுறியை சேர்ந்த முன்னாள் காதலன் ஆஞ்சி (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அதே ஊரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஷாலினி அவரது 2வது கணவருக்கு தெரியாமல் என்னுடன் தொடர்பில் இருந்து வந்தார். நாங்கள் பலமுறை உல்லாசமாக இருந்ததில் கர்ப்பமானார். தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

கர்ப்பத்திற்கு நீ தான் காரணம். எனவே நீ என்னை திருமணம் செய்து கொள். இருவரும் வேறு ஊருக்கு சென்று விடலாம் என ஷாலினி கூறி வாக்குவாதம் செய்து வந்தார். கடந்த 19ம்தேதி என்னை தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் என்றார். இதனால் அவளை கொலை செய்ய திட்டமிட்டு நண்பரான கிருஷ்ணகிரி பெரிய அக்ஹாரத்தை சேர்ந்த புகழேந்தியை (19) அழைத்தேன். பின்னர் மூவரும் ஒரே டூவீலரில் அன்றிரவு 11 மணிக்கு கோனேகவுண்டனூர் வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு கத்தியால் ஷாலினியின் கழுத்தில் குத்தினேன். பின்னர் கர்ப்பிணி என்றும் பாராமல் புகழேந்தி உதவியுடன் அவரது துப்பட்டாவால் கழுத்தில் இறுக்கி மரத்தில் கட்டி தூக்கிட்டு துடிக்க துடிக்க கொன்றுவிட்டு, சென்று விட்டோம். செல்போன் டவர் லோகேஷன் மூலமாக எங்களின் எண்ணை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

The post கர்ப்பத்துக்கு நீதான் காரணம் என கூறி 3வது திருமணம் செய்ய வற்புறுத்திய 8 மாத கர்ப்பிணி குத்திக்கொலை: 21 வயது கள்ளக்காதலன் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Konegaundanur ,Veppanahalli ,Krishnagiri district ,Krishnagiri Government Medical College Hospital ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...