×

இயற்கை எழிலுடன் ஆண்டு முழுவதும் ஆர்ப்பரிப்பு ஆளை அசத்தும் ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி

மூணாறு : மூணாறு அருகே ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ள ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தென்மாநிலங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிகவும் பிரபலமானதாகும்.

மூணாறின் ஸ்பெஷல் பச்சைப்பசேல் தேயிலைத் தோட்டங்களும் குளுமையும்தான். நல்லதண்ணி ஆறு, கன்னிமலை ஆறு, குண்டளை ஆறு என்ற மூன்று ஆறுகளும் சங்கமிப்பதால் இப்பகுதிக்கு மூணாறு என்று பெயர் வந்தது.

இந்த மூன்று ஆறுகள் சங்கமித்து ஒன்றாக சேர்ந்து பாயும் நீர்வீழ்ச்சி தான் ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி. பச்சைப்பசேல் என்று காணப்படும் தேயிலைத் தோட்டங்களுக்கும், மலைக் குன்றுகளுக்கும் இடையே வெள்ளியை உருகி ஓடுவதுபோல் நீர்வீழ்ச்சி காட்சியளிக்கிறது.

ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி இயற்கையான வசீகரம் மற்றும் அழகு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மூணாறு மற்றும் பள்ளிவாசல் இடையே இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சியானது அதன் நீண்ட மலையேற்றப் பாதைக்கு புகழ்பெற்றது.

மூணாறில் இருந்து சுமார் 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மாட்டுப்பட்டி, ஹெட் ஒர்க்ஸ் போன்ற அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சி சுற்றுலாப் பயணிகளின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது.

The post இயற்கை எழிலுடன் ஆண்டு முழுவதும் ஆர்ப்பரிப்பு ஆளை அசத்தும் ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Atrukadu Waterfall ,Munnar ,Idukki district ,Kerala ,southern states ,The Atrukadu Waterfall ,
× RELATED திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில்...