மதுரை: டோல்கேட்களில் பொதுமக்களை தாக்கும் சூழல் உள்ளதாகவும், கட்சிக்கொடி கட்டி வரும் வாகனங்களுக்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், இந்த தடத்திலுள்ள 2 டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதித்தனர். இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஐகோர்ட் கிளையின் உத்தரவுக்கு தடை உத்தரவு பெற்றனர். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன்பு மீண்டும் விசாணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், ‘‘ஐகோர்ட் கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது. ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், ‘‘கடந்த வாரம் இந்த தேசிய நெடுஞ்சாலையில், விபத்து ஏற்பட்டு தஞ்சாவூர் நீதிபதி பலத்த காயம் அடைந்துள்ளார். அவருடன் பயணித்த நபர்கள் உயிரிழந்தனர்’’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்கின்றனர். அதே வேளையில் இந்த நெடுஞ்சாலையில், குண்டும், குழியான சாலைகளை சீர்படுத்தி மேம்படுத்த வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்துதல், சாலையின் சில இடங்களை வாகனங்களில் வேக கட்டுபாடு உள்ளிட்ட நவீன முறைகளை கையாண்டு, தொடர் சாலை பராமரிப்பை செயல்படுத்த வேண்டும். கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது இல்லை. பொதுமக்கள் வரக்கூடிய வாகனங்கள் சிறு பிரச்னை செய்தாலும் அவர்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது’’ எனக் கூறி மனு மீதான விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
The post டோல்கேட்களில் பொதுமக்களை தாக்கும் சூழல் கட்சிக்கொடி கட்டிய வாகனத்துக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில்லை: ஐகோர்ட் கிளை கண்டனம் appeared first on Dinakaran.
