×

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நெல், கரும்பு சாகுபடிகளைத் தொடர்ந்து, அதிக நிலப் பரப்பில் சாகுபடி செய்யப்படுவது ‘மா’ மற்றும் ‘தென்னை’ ஆகும். சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் ஹெக்டேரில் ‘மா’ சாகுபடி செய்யப்படுகிறது.

இதில் குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழத்தில், மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி மாவட்ட ‘மா’ விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு 4 முதல் 5 ரூபாய் மட்டுமே தர முன்வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ‘மா’ விவசாயிகள் கொள்முதல் விலையாக மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000/- ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மாம்பழக் கூழுக்கான GST வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்னைகளைப் போக்கவும், மேலும் அவர்கள் தெரிவித்துள்ள மற்ற கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடகமாடப்படுகிறதே தவிர, இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் ‘மா’ பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க அரசை வலியுறுத்தி, அதிமுக கிருஷ்ணகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20.6.2025 – வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, MLA., தலைமையிலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான P. பாலகிருஷ்ணா ரெட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் K. அசோக்குமார், MLA., ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் T.M. தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த, கட்சி சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்களும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கட்சி உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், ‘மா விவசாயிகள்’, வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.

The post மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Chennai ,General Secretary ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...