×

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிதம்பரம்: நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சனம் ஆகிய இருபெரும் தரிசன விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதி ஹஸ்தராஜரை ஆவாஹணம் செய்து, வேத மந்திரங்கள் முழங்க காலை 8 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார்.

இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், இன்று (26ம் தேதி) முதல் ஜனவரி 1ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா 2ம் தேதி நடைபெறுகிறது. 3ம் தேதி சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா மற்றும் ஆருத்ரா தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலா, 5ம் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

Tags : Chidambaram Natarajar Temple Arutra Vision Festival ,Chidambaram ,Marghazi Month ,Arutra Darisana Festival ,Natarajar Temple ,Swami ,Cuddalore ,Marghazi ,Ikoil ,
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி...