×

எண்ணூர் முகத்துவார ஆற்றில் கருப்பு நிற ரசாயன கழிவுகள்: அதிகாரிகள் ஆய்வு


திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார ஆற்றில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், காட்டுகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இறால், நண்டு, மீன் ஆகியவற்றை பிடித்து, பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த முகத்துவார ஆற்றில் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவன கழிவுகளை விடுவதால், ஆற்று நீர் மாசுபட்டு நீர்வாழ் உயிரினங்கள் செத்து மடிகின்றன. இதனால், தங்களுடைய வாழ்வாதாரம் நாளுக்கு நாள் பாதித்து வருவதாக எண்ணூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பக்கிங்காம் கால்வாய் – முகத்துவார ஆறு இணையும் பகுதியில் கடந்த இரு தினங்களாக தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கருப்பு நிறத்தில் மிதக்கிறது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மீனவர்கள், இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஆற்றை பார்வையிட்டு மிதக்கும் கருப்பு நிற கழிவை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனாலும், தொடர்ந்து இந்த படலம் அதிகப்படியாக மிதந்து வருவதால், இது எந்த தொழிற்சாலையில் இருந்து வரக்கூடிய கழிவு என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், “கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு தனியார் நிறுவன கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே பக்கிங்காம் கால்வாய் மற்றும் முகத்துவார ஆற்றில் விடுவதால் ஆற்றில் உள்ள இறால், நண்டு போன்றவை அழிந்து, எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

மேலும், ரசாயன கழிவால் ஆற்று நீர் மாசடைந்து நீர்வாழ் உயிரினங்களில் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மீன்வளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post எண்ணூர் முகத்துவார ஆற்றில் கருப்பு நிற ரசாயன கழிவுகள்: அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tulur Mughatuwara River ,Nettukupam ,Tadalanupam ,Katugupam ,Tulur Muthuwara River ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...