×

சென்னையில் அச்சக பணியாளர்களுக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர்கள்..!!

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று (13.06.2025) சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில் அரசு அச்சக பணியாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:

‘தமிழ்நாடு அரசின் எழுது பொருள் அச்சுத் துறையின் அரசு அச்சகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டுவதற்கு முதலமைச்சரும் , துணை முதலமைச்சரும் உத்தரவிட்டு, 40 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார்கள். இதன்படி சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் ஆறு மாடி குடியிருப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இக்குடியிருப்பில் ஏறத்தாழ 96 பணியாளர்கள் குடும்பத்துடன் குடியிருக்கக்கூடிய வகையில் 430 சதுர அடியில் ஒவ்வொரு வீடும் அமையப் பெற்றிருக்கின்றது.

ஒவ்வொரு தளத்திற்கும் 16 குடியிருப்புக்கள் உள்ளடங்கியிருக்கிறது. இப்பணிகள் விரைவில் முடிவடைய இருக்கின்றது. இக்குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்வதற்காக வந்தோம். இப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் பணியாளர்கள் குடியேறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். முதலமைச்சருக்கு எங்களுடைய துறையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதலமைச்சர் விரைவில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பை திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.’இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீரசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வெ.ஷோபனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., மற்றும் பொது பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சென்னையில் அச்சக பணியாளர்களுக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Minister ,Saminathan ,Hindu Religion and ,Trusts ,Sekarbabu ,Thandaiyarpet ,Kamaraj Nagar, Chennai ,Stationery and Printing Department… ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...