மதுரை, ஜூன் 12: மதுரை அரசு மருத்துமவனையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு துவக்கப்பட்டுள்ள மண் சிகிச்சைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா துறையில் தற்போது நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மண் சிகிச்சைக்கு வரவேற்பு பெருகி வருகிறது. துவக்கத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையிலிருந்து இதற்கான மண், எரிமலைக் குழம்பு தோற்றத்திலிருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டது. பலதரப்பட்ட தாதுக்களுடன், மருத்துவ குணங்கள் நிரம்பிய இந்த மண் பின்னாளில், உரிய வரத்தின்றி போனதால், மண் சிகிச்சை தடைபட்டது. தற்போது தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியில் இயற்கை மருத்துவத்துறையின் ஏற்பாட்டில் மருத்துவ குணமிக்க இந்த மண் வழங்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இச்சிகிச்சை, மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனையின் இற்கை மருத்துவம் மற்றும் யோகா துறை உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் நாகராணி நாச்சியார் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு இயற்கை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. மூட்டுவலி, உடல் பருமன், சர்க்கரை நோய் துவங்கி மனநல பிரச்னைகள் வரை பலதரப்பட்ட பாதிப்புகளுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 16 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இதில் மருத்துவமனையில் 2014 முதல் இயற்கை முறையிலான மண் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தடைபட்டு, மீண்டும் தற்போது இச்சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
நோய்களை சுகப்படுத்துவதுடன், சருமத்தை மேம்படுத்தும் அழகுசாதன சிகிச்சைக்கும் இந்த மண் கை கொடுக்கிறது. 6 அடி ஆழத்தில் மண் எடுத்து கற்கள் உள்ளிட்டவைகளை அகற்றி, வெயிலில் காயவிட்டு, ஒருநாள் முழுக்க ஊறவைத்து, பதப்படுத்தி பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி பெறப்படும் இந்த மண், தோல் நோய்கள் துவங்கி அனைத்து வித பாதிப்புகளுக்கும் நல்ல பலன் தரும். பக்க விளைவுகளைக் குறைத்து, மிக இயற்கையான முறையில் நோய்களுக்கு தீர்வு தருகிறது. ஈரப்பதம் சருமத்தின் துளைகளைத் தளர்த்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, உட்புற உறைதலை நீக்கி, வெப்பக் கதிர்வீச்சை ஊக்குவித்து, விதையை வளரச் செய்து, குப்பையை உரமாக்கும் மண்ணின் செயல்பாட்டைப்போலவே, இந்த மண் சிகிச்சையும் நல்ல அனைத்து நோய்களுக்கும் நல்ல பலன் தந்து வருகிறது. மக்களின் கூடுதல் வரவேற்பை தற்போது இந்த மண் சிகிச்சை பெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் ‘மண் சிகிச்சை’ appeared first on Dinakaran.
