×

வாழ்க்கை துணைவரின் பெயரை சேர்க்க; பாஸ்போர்ட் நடைமுறையில் புதிய திருத்தம் அமல்


சென்னை: பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணைவரின் பெயரை சேர்க்க அல்லது நீக்க “இணைப்பு ஜெ”வை பயன்படுத்தலாம் என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமண சான்றிதழுக்கு மாற்றாக “இணைப்பு ஜெ” எனப்படும் எளிமையான பிரமாணப்பத்திரத்தை பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.

இந்த முயற்சி விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும் தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “இணைப்பு ஜெ” என்பது எளிமைப்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரமாகும், இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை முறையாக அறிவித்து, பாஸ்போர்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க (அல்லது நீக்க) கூட்டாக கோருகின்றனர். “இணைப்பு ஜெ” படிவத்தில் இரு தரப்பினரும் கையொப்பமிட்டு, சுய சான்றளிக்கப்பட்ட கூட்டு புகைப்படத்துடன் இணைக்கப்பட வேண்டும். ‘இணைப்பு ஜெ’வில் தம்பதியினரின் கூட்டு, சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படம், இருவரின் முழுப் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிறந்த தேதிகள், திருமண நிலையின் தெளிவான அறிவிப்பு, ஆதார் எண் மற்றும் வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் எண் நிரப்ப வேண்டும்.

மேலும் மறுமணத்திற்குப் பிறகு புதிய துணைவரின் பெயரைச் சேர்க்க விண்ணப்பதாரர்கள் விவாகரத்து ஆணை, மறுமணச் சான்றிதழ், முன்னாள் துணைவரின் இறப்புச் சான்றிதழ், மறுமணச் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த சீர்திருத்தத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தகவலுக்கும் இணைப்பு ஜெ பதிவிறக்கம் செய்யவும், அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்தை அணுக வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வாழ்க்கை துணைவரின் பெயரை சேர்க்க; பாஸ்போர்ட் நடைமுறையில் புதிய திருத்தம் அமல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Passport Office ,Ministry of External Affairs ,Dinakaran ,
× RELATED தராசுகள் பறிமுதல் செய்ததை கண்டித்து...