×

கோவையில் இருந்து 5 விமான சேவை ரத்து: தொழில் துறையினர் அதிருப்தி

கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், புனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, கோவை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய பகுதிகளுக்கு இயக்கி வந்த 3 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. மேலும், கோவையில் இருந்து அபுதாபி இடையே இயக்கப்படும் விமான சேவையை அக்டோபர் முதல் ரத்து செய்ய உள்ளதால், கோவையில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படும் வாரந்திர விமானங்களின் எண்ணிக்கை மூன்றாக குறைய உள்ளது.

இதேபோல், ஏர் இந்தியா நிறுவனம் சென்னை-கோவை இடையேயான ஒரு விமான சேவையை ரத்து செய்துள்ளது. இது கோவை தொழில் துறையினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை நல்ல வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இண்டிகோ மூன்று உள்நாட்டு விமானங்களையும், ஒரு சர்வதேச விமானத்தையும் ரத்து செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் கோவையில் இருந்து சென்னை செல்லும் ஒரே விமானத்தையும் ரத்து செய்துள்ளது. இது கோவை-சென்னை இடையே தினசரி இரண்டு விமானங்களை குறைக்க வழிவகுக்கும்.

இதன் காரணமாக, விமான டிக்கெட்கள் விலை அதிகரிக்கும். கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், விமான சேவைகள் குறைக்கப்பட்டு இருப்பது அதிருப்தியை தருகிறது. பயணிகள் சிரமமின்றி விமான பயணங்களை மேற்கொள்ளும் வகையில் தொடர்ந்து விமானங்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கோவையில் இருந்து 5 விமான சேவை ரத்து: தொழில் துறையினர் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Goa ,Goa Airport ,Chennai ,Mumbai ,Bangalore ,Delhi ,Hyderabad ,Pune ,Singapore ,Sharjah ,Abu Dhabi ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50...