×

உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்த நிலையில் 9 ஆண்டாக நிலுவையில் இருந்த கேரளா மசோதாவுக்கு ஒப்புதல் தர ஜனாதிபதி மறுப்பு

புதுடெல்லி: கேரளா சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். இதுதொடர்பாக ஆளுநருக்கு எதிராக கேரளா அரசு தொடர்ந்த ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கேரள சட்டப்பேரவையில் மொழி மசோதா கடந்த 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, பள்ளிகளில் மலையாளத்தை முதன்மை மொழியாக மாற்றுதல், மசோதாக்கள், சட்டங்கள் மற்றும் ஆளுநரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் மலையாளத்தை பயன்படுத்துவதை கட்டாயமாக்குதல், மாவட்ட நீதிமன்றங்களில் அதை அதிகாரப்பூர்வ மொழியாக அறிமுகப்படுத்துதல், சிறு வழக்குகளின் தீர்ப்புகள், அரை-நீதித்துறை அமைப்புகள் மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை இந்த சட்டம் முன்மொழிந்தது ஆனால் இந்த மசோதாவுக்கு அப்போதைய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்த மசோதா 9 ஆண்டுகளாக குடியரசுத் தலைவரிடம் கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளிக்காமல் அதனை நிராகரித்து உள்ளார். அதற்கான காரணமும் எதுவும் குடியரசு தலைவரால் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

The post உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்த நிலையில் 9 ஆண்டாக நிலுவையில் இருந்த கேரளா மசோதாவுக்கு ஒப்புதல் தர ஜனாதிபதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : President ,Supreme Court ,New Delhi ,Kerala Legislature ,Kerala government ,Kerala ,Dinakaran ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...