×

ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடாக முந்தியது இந்தியா

புதுடெல்லி: 2025ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள் தொடர்பாக ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா தொடர்ந்து நல்ல வளர்ச்சி விகிதங்களுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக உள்ளது. 2025-26ம் நிதியாண்டின் 2ம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.2 சதவீதமாக வளர்ந்துள்ளது.

இது முதல் காலாண்டில் 7.8 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் 7.4 சதவீதமாகவும் இருந்தது. இதன் மூலம், 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. மேலும், 2030ம் ஆண்டுக்குள் 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற கணிப்புடன், அடுத்த 3 ஆண்டுகளில் ஜெர்மனியை முந்தி 3வது இடத்தை பிடிக்கும் நிலையில் உள்ளது.

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. தொடர்ச்சியான உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் 2025-26ம் நிதியாண்டின் 2ம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆறு காலாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியதன் மூலம், இந்த வளர்ச்சி வேகம் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான தனியார் நுகர்வு உட்பட உள்நாட்டு காரணிகள், இந்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்துள்ளன. இந்த நம்பிக்கையை சர்வதேச அமைப்புகளும் எதிரொலித்துள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* டாப் 5 நாடுகள்
1. அமெரிக்கா
2. சீனா
3. ஜெர்மனி
4. இந்தியா
5. ஜப்பான்

Tags : India ,Japan ,New Delhi ,Union Government ,India's… ,
× RELATED உக்ரைன் திடீர் மறுப்பு ரஷ்ய அதிபர்...