×

பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவியின் உயர்கல்வி செலவை ஏற்றுக்கொண்ட ஆரணி எம்பி

வந்தவாசி : தினகரன் செய்தி எதிரொலியாக, வந்தவாசி அருகே பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவியின் உயர்கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் உறுதியளித்தார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வெங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன்- பரிமளா தம்பதி.

இவர்களது மகள்கள் கவிதா(17), திவ்யா(15). வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கவிதா பிளஸ் 2 வகுப்பும், திவ்யா 10ம் வகுப்பும் பயின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் கவிதா 553 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். அவரது தங்கை திவ்யா 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.

தாய் பரிமளா கவிதா பிறந்த 10 மாதங்களிலேயே உயிரிழந்தார். தந்தை வீரராகவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சித்தப்பா நாதஸ்வர கலைஞர் செல்வம்- செல்வி பராமரிப்பில் இருந்தனர். தந்தை வீரராகவனும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

தாய், தந்தையை இழந்த சகோதரிகள் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி சாதனை படைத்துள்ளனர். பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தால் வளாகத்தேர்வு மூலம் விரைவில் வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கலாம் என கருதும் மாணவி கவிதா பணவசதி இல்லாமல் பரிதவித்து வருகிறார்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 23ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இந்த தகவலை அறிந்த ஆரணி எம்பியும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.எஸ்.தரணிவேந்தன் நேற்று மாணவி கவிதாவை தனது இல்லத்திற்கு அழைத்து விசாரித்து, உயர்கல்விக்கான ஆலோசனைகள் வழங்கினார்.

அப்போது, மாணவி பொறியியல் மற்றும் நர்சிங் இரு படிப்பிற்கும் விண்ணப்பம் செய்கிறேன். எது கிடைக்கிறதோ அதனை படிக்கிறேன் என கூறினார். அதற்கு எம்பி, மாணவி எதை தேர்வு செய்தாலும் எந்த கல்லூரிக்கு என்றாலும் 4 வருட உயர்கல்வி செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். பின்னர், மாணவி கல்லூரியில் சேர்வதற்கான ஆரம்ப கட்ட செலவிற்கு ரூ.10,000ஐ வழங்கினார்.

அப்போது, அனக்காவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திராவிட முருகன், வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும், மாணவியின் உயர்கல்வி கனவை நிறைவேற்றும் விதமாக திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி துணைத்தலைவர் கணேஷ்குமார், ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் சிவகுமார் ஆகியோரும் உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக கூறியுள்ளனர்.பெற்றோரை இழந்த மாணவியின் உயர்கல்வி செலவை எம்பி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, முன்னதாக செய்தியை வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு மாணவியின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

The post பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவியின் உயர்கல்வி செலவை ஏற்றுக்கொண்ட ஆரணி எம்பி appeared first on Dinakaran.

Tags : Arani ,Vandavasi ,Dinakaran ,M.S. Dharanivendan ,Veeraragavan-Parimala ,Venkodu ,Cheyyar taluka, Tiruvannamalai district ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...