மதுரை: விசாரணை நீதிமன்றங்களில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காவல் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே இது போன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக தனிநீதிபதி, சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் அப்போதைய தென் மண்டல காவல் துறை தலைவர் அறிவுறுத்தலின் பேரில், பல வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை விரைந்து தாக்கல் செய்யப்பட்டன. இதனால் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டன.
மேலும் காவல்துறை தலைமை இயக்குநர், கடந்த 20.1.2025 அன்று அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், எந்த வழக்காக இருந்தாலும் கால தாமதமின்றி நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள். இருப்பினும் அவரது சுற்றறிக்கையால் எந்த பயனும் இல்லை. அவரது சுற்றறிக்கையை பிற காவல் துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். நீண்ட நாள்களாக பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்ந்தால் மட்டுமே வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதை கால தாமதப்படுத்த மாட்டார்கள். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
The post விசாரணை நீதிமன்றங்களில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத போலீசார் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
