×

பொது அமைதியை சீர்குலைப்பதாக புகார்; மதுரை ஆதீனத்தை கண்டித்து மடத்தை முற்றுகையிட முயற்சி: 57 பேர் கைது

மதுரை: சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதாக கூறி, மதுரை ஆதீனத்தை கண்டித்து மடத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கடந்த 3ம் தேதி நடந்த சைவ சமய மாநாட்டில் மதுரை ஆதீனம் பங்கேற்றார். அங்கு செல்லும்போது 2ம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனது காருடன் மற்றொரு கார் மோதியதாகவும், தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் குறிப்பிட்ட மதத்தை தொடர்பு படுத்தி மதுரை ஆதீனம் குற்றம் சாட்டிப் பேசினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மதுரை ஆதீனம் கூறியது தவறு என தெரியவந்தது.

இதையடுத்து ஆதீனம் பேசியது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. பல்வேறு அமைப்பினரும் ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்தனர். அந்த வகையில், மதுரை ஆதீனத்தின் மத வெறுப்பு பேச்சு, தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், அவரை தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவும், மதுரை ஆதீன பொறுப்பிலிருந்து அவரை நீக்கக்கோரியும், மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், மதுரை ஆதீனம் மடத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று காலை ஆதீன மடத்தை முற்றுகையிடுவதற்காக மதுரை ஜான்சிராணி பூங்கா பகுதியில் திரண்டனர். ஆதீன மடத்திற்கு செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்தனர். கூட்டமைப்பினர் வக்கீல் வாஞ்சிநாதன் தலைமையில் ஆதீனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆதீன மடத்தை முற்றுகையிட புறப்பட்டவர்களை தடுத்த போலீசார் 57 பேரை கைது செய்தனர்.

The post பொது அமைதியை சீர்குலைப்பதாக புகார்; மதுரை ஆதீனத்தை கண்டித்து மடத்தை முற்றுகையிட முயற்சி: 57 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Matha ,Madurai ,Atheenam ,Madurai Atheenam ,Saiva religious conference ,Chennai ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் நிலப் பிரச்சனையில்...