சென்னை: கொளத்தூரில் திமுகவின் நான்காண்டு சாதனை கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், தெருமுனை கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்த பிரமாண்ட கண்காட்சி தயார் செய்யப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை நேற்று மாலை துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியில் திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை பிரதிபலிக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு அதில் ஒவ்வொரு திட்டங்களும் பொதுமக்கள் மனதில் எளிதில் சென்று சேரும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் 4 ஆண்டு சாதனைகள் குறித்து குறும்படமும் வெளியிடப்பட்டது. தியேட்டர் வடிவில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த குறும்படம் திரையிடப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
இந்த கண்காட்சி திறப்பு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், ரவிச்சந்திரன், உதயசங்கர், துரைகண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post கொளத்தூரில் திமுக நான்காண்டு சாதனை விளக்க கண்காட்சி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
