மரக்காணம், மே 17: மரக்காணம் அருகே மீனவர் வலையில் அபூர்வ யேமன் கோலா மீன் சிக்கியது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கைப்பாணி குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்த பழனி, முகேஷ், ஜெயவர்த்தனன் ஆகியோர் நேற்று காலை வழக்கம்போல் மீன்பிடிக்க ஒரே பைபர் படகில் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது வலையில் சுமார் 250 கிலோ எடையுள்ள ஒரு பெரிய மீன் சிக்கியுள்ளது. இதனை பார்த்த மீனவர்கள் அந்த மீனை வலையிலிருந்து பத்திரமாக பிடித்து பைபர் படகுக்கு எடுத்து வந்துள்ளனர்.
அப்போதுதான் மீனவர்களுக்கு இந்த மீன் அட்லாண்டிக் பசிபிக் கடல் பகுதியில் வளரக்கூடிய அபூர்வ இனத்தை சேர்ந்த யேமன் கோலா என தெரியவந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மீனவர்கள் இந்த அபூர்வ கோலா மீனை கைப்பாணி குப்பம் மீனவர் பகுதிக்கு எடுத்து வந்துள்ளனர். இதையறிந்த சக மீனவர்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர். இந்த வகை மீன்கள் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடல் பகுதியில் இருந்து காற்று விசையின் மாறுபாடு மற்றும் கடலில் இயற்கையாக உண்டாகும் மாறுபட்ட நீரோட்டம் மற்றும் சீதோஷ்ண நிலை போன்ற இயற்கை தகவமைப்பின் காரணமாக தமிழக கடற்பகுதிக்கு வரும். இந்த மீனின் விலை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாக கூடும் என மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
The post மரக்காணம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ யேமன் கோலா மீன் appeared first on Dinakaran.
