கோவில்பட்டி, டிச. 24: கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே வாறுகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து பெருமாள் நகர் பழத்தோட்ட தெருவில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி தாழ்வான பகுதி என்பதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆகியவை இங்கு வந்து குளம்போல் தேங்குகின்றன. மேலும் போதிய வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற முறையான வாறுகால் அமைத்து அருகில் கண்மாய்க்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
