×

பேரிடர் மீட்பு ஒத்திகை காவிரி ஆற்றுப்பகுதியில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

கரூர், மே. 16: கரூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் காவிரி ஆற்றுப்பகுதியான தவிட்டுப்பாளையம், மாயனூர், வாங்கல் மற்றும் குளித்தலை கடம்பர் கோயில் பகுதிகளிலும், அமராவதி ஆற்றில் பசுபதிபாளையம் ஐந்து ரோடு பகுதிகளிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பசுபதிபாளையத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையிலும், மாயனூர் கதவனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சார் ஆட்சியர் சுவாதி தலைமையிலும், வாங்கலில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமையிலும், குளித்தலை பகுதியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு தாசில்தார் இந்துமதி தலைமையிலும், தவிட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தாசில்தார் தனசேகரன் தலைமையிலும் நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், காவிரி ஆற்றில் அதிகளவு நீர் திறக்கும் போது ஏற்படும் பேரிடர்கள் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய ஒத்திகை நிகழ்வுகள் நேரிடையாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் தண்ணீரில் முழ்கும் போது எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம், வீட்டில் உள்ள எளிய பொருட்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம், மீட்கப்பட்ட நபருக்கு எவ்வாறு முதலுதவி அளிக்கப்பட்டது, தொடர்ந்து அவரை அவசர கால ஊர்தியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல், வெள்ளப் பெருக்கு அபாயத்தின் போது, பொதுமக்களை எவ்வாறு வாகனங்கள் மூலம் வேகமாக பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றுவது போன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒத்திகை நிகழ்ச்சியாக நடத்திக் காட்டப்பட்டது. இந்த நிகழ்வில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்து துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பேரிடர் மீட்பு ஒத்திகை காவிரி ஆற்றுப்பகுதியில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Cauvery River Area ,Karur ,Cauvery River ,Thavittpalayam ,Mayanur ,Vangal ,Kulithalai Kadambar Koil ,Amaravati River ,Pasupathipalayam ,Dinakaran ,
× RELATED தகாத வார்த்தையில் பேசியதாக இளம்பெண் மீது வழக்குப்பதிவு