சென்னை: சென்னை பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒன்றிய அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 22651) ரயிலில், ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியின் மிடில் பெர்த் அறுந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணி ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எம்.பி., ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம்: சென்னை-பாலக்காடு எக்ஸ்பிரஸ் எண் (22651) ரயிலில், ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் பயணியின் தலையில் மிடில் பெர்த் அறுந்து விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உடனடி மருத்துவ உதவி கிடைக்காததும், பாதுகாப்பு கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் இந்திய ரயில்வேயின் சேவை தரத்தையும், பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. குறிப்பாக பழைய ரயில்களில் இது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. ஊடகங்களில் வெளியாகிய தகவலின்படி, தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியரின் மீது மிடில் பெர்த் அறுந்து விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.
அவரது கணவரும் மற்ற பயணிகளும் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளிடம் மருத்துவ உதவி கோரிய போதும், சேலம் வரை சுமார் 90 நிமிடங்கள் எந்தவொரு முதற்கட்ட மருத்துவ உதவி அளிக்கப்படவில்லை. இது போன்ற தாமதங்கள், எந்தப் பொதுப் போக்குவரத்து அமைப்பிலும் ஏற்கத்தக்கதல்ல, இந்திய ரயில்வே போன்ற மிகப்பெரிய அமைப்பில் இது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. மேலும், சம்பவம் நடந்த ரயில் பெட்டி 19 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்லீப்பர் பெட்டியாகும். 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியாக பராமரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் 20 ஆண்டுகளாக சேவையில் உள்ள இத்தகைய பழமையான பெட்டிகள் பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் கட்டமைப்பு பரிசோதனைகள் இன்றி இன்னும் இயக்கப்படுவது கவலையளிக்கிறது.
பயணியின் தவறான கையாளுதலால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகளால் விளக்கம் கூறப்பட்டாலும், ரயில்வேயின் பாதுகாப்பு கட்டமைப்புக்கான பொறுப்பை இது கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த சம்பவத்தை முன்வைத்து, ரயில்வே அமைச்சகம் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதன்படி தற்போது செயல்பாட்டில் உள்ள 15 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து பெட்டிகளிலும் முழுமையான பாதுகாப்பு ஆய்வு நடத்த வேண்டும். பழைய பெட்டிகளை நவீன மற்றும் பாதுகாப்பான ரேக்குகளுடன் விரைவாக மாற்ற வேண்டும். பயண வசதிகள், மேல்படுக்கை பூட்டு அமைப்புகள் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு ஆய்வுகளை நிலையான முறையில் செயல்படுத்த வேண்டும்.
அனைத்து நீண்ட தூர ரயில்களிலும் செயல்பாட்டு மற்றும் கையிருப்பு உள்ள முதலுதவி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சாத்தியமான இடங்களில், பயிற்சி பெற்ற துணை மருத்துவர்கள், குறிப்பாக இரவு நேர பயணங்களின் போது, உடன் இருக்க வேண்டும். ரயில் பெட்டி வசதிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் முதலுதவி மற்றும் அவசரகால நடவடிக்கைகளில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய பாதுகாப்பு மீறல்களுக்கு விரைவில் தீர்வு காணும் நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டு பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.
இந்திய ரயில்வே, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பையும் தரமான சேவையையும் உறுதி செய்வதில் சமரசம் செய்யக்கூடாது. நிறுவன பொறுப்புணர்வையும் முறையான சீர்திருத்தத்தையும் வலுப்படுத்துவதற்கான ஒரு எச்சரிக்கை மணியாக இந்த சம்பவம் செயல்படும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் உங்களின் முழுமையான கவனத்தையும் உடனடி நடவடிக்கையையும் எதிர்பார்க்கிறேன். உங்கள் அக்கறைக்கும், நடவடிக்கைக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னை-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து உரிய நடவடிக்கை தேவை: ஒன்றிய அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம் appeared first on Dinakaran.
