கல்புர்கி: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், போர் நிறுத்த அறிவிப்பு பற்றி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே நேற்று கர்நாடாக மாநிலம் கல்புர்கியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் முதலில் வாஷிங்டனில் இருந்தும், பின்னர் இந்தியா – பாகிஸ்தான் அரசாங்களிடமிருந்தும் போர் நிறுத்த அறிவிப்புகள் வௌியாகின. இதுகுறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஏற்கனவே பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், நானும் கடிதம் எழுதி உள்ளோம். இந்த கோரிக்கையை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. நாம் அனைவரும் அமைதியை விரும்பினாலும், தேவைப்படும்போது நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்திய ஆயுத படைகள் முழு பலத்துடன் போராடி உள்ளன.
நமது நாட்டிலும், பாகிஸ்தானிலும் என்ன நடக்கிறது, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தற்போதைய நிலையின் பிற முன்னேற்றங்கள், மக்களை பாதுகாக்க வேறென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். இதுதொடர்பான விவாதங்கள் நடைபெற வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம்” என இவ்வாறு
தெரிவித்தார்.
அமெரிக்கா தலையிட அனுமதித்தது ஏன்? சரத் பவார் கேள்வி
ஒன்றிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) கட்சி தலைவருமான சரத் பவார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நம் உள்நாட்டு பிரச்னை பற்றி அமெரிக்க அதிகாரி பகிரங்கமாக பேசியது இதுவே முதல்முறை. இது நல்லதல்ல. சிம்லா ஒப்பந்தம் இந்தியா – பாகிஸ்தான் பிரதமர்களிடையேயான ஒரு பிரத்யேக ஒப்பந்தம். இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்வது. இதில் மூன்றாம் நபரின் தலையீடு இருக்காது என்பதை தௌிவாக காட்டுகிறது. அப்படியிருக்கும்போது இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்கும்போது 3ம் நபர் தலையிட நாம் எப்படி இடம் கொடுக்க முடியும்? இதுகுறித்த கேள்விகளுக்கு அரசாங்கம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி பதில் சொல்ல வேண்டும்” என வலியுறுத்தினார்.
The post ஆபரேஷன் சிந்தூர், போர் நிறுத்த அறிவிப்பு பற்றி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும்: காங். மீண்டும் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
