×

இஸ்லாமியர்களுக்கு சலுகைகளும், உரிமைகளும் வழங்கியது திமுக அரசு: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திருச்சி: இஸ்லாமியர்களுக்கு சலுகைகளும், உரிமைகளும் வழங்கியது திமுக அரசு என திருச்சியில் நேற்று நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருச்சி குண்டூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9வது மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நானும், திராவிட முன்னேற்றக் கழகமும் எந்தளவுக்கு, சிறுபான்மையின மக்கள் மேல் அக்கறையோடு செயல்படுகிறோம் என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். உங்களுக்கான பாதுகாப்பு அரணாக மட்டுமில்லை, உங்களுக்கான உரிமைகளையும், சலுகைகளையும் வழங்குவதில், திமுக அரசுதான், என்றைக்கும் முதன்மையான அரசாக விளங்கி கொண்டிருக்கிறது. கடந்த நான்காண்டுகளில், சிறுபான்மையின மக்களுடைய சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்களை, சாதனைகளை படைத்திருக்கிறோம். அண்மையில்கூட, நங்கநல்லூரில் ‘தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ கட்டப்படும் என்று அறிவித்தேன். பலரும் என்னிடம்
மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

இதேபோல், நம்முடைய திராவிட மாடல் அரசில் ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அதே நம்பிக்கையுடன் தான் நீங்களும் சில கோரிக்கைகளை இந்த மாநாட்டு மூலமாக, தீர்மானங்களாக வடித்தெடுத்து சொல்லியிருக்கிறீர்கள். முதல் அறிவிப்பு , திருநெல்வேலி மாவட்டத்தில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் சட்டமன்றத்தில் நான் அறிவித்திருக்கிறேன். அந்த நூலகத்திற்கு கண்ணியத்திற்குரிய காயித மில்லத் அவர்கள் பெயர் சூட்டப்படும். இரண்டாவது அறிவிப்பு, சென்னை பல்கலைக் கழகத்தில், இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இந்த கோரிக்கையை ஏற்று இதை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கவிக்கோ என்றதும் தலைவர் கலைஞர் சொன்னதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

“வெகுமானம் எதுவேண்டும் என்று கேட்டால், அப்துல் ரகுமானை தான் கேட்பேன்” என்று தலைவர் கலைஞர் சொன்னார் இதைவிட பெரிய பாராட்டு நிச்சயமாக இருக்க முடியாது அப்படிப்பட்ட கவிக்கோ அவர்களுடைய நூல்களைதான், சில நாட்களுக்கு முன்னால், நாட்டுடைமையாக்கி, அவரது குடும்பத்திற்கு, பத்து லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறோம். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டிருக்கிறோம். அதேபோல், தி.மு.க.வினருடைய நெஞ்சிலும் தினமும் ஒலித்துகொண்டு இருக்கும் குரலுக்குச் சொந்தக்காரர், ‘இசைமுரசு’ நாகூர் ஹனிபா அவரது நூற்றாண்டு பிறந்தநாளையும், அறிவியல் தமிழ் அறிஞரான மணவை முஸ்தபா பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டிருக்கிறோம்.

இப்படி, “இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்று வாழ்ந்த பெருமக்கள் தமிழ்நாட்டில் அதிகம். சிந்தையள்ளும் ‘சீறாபுராணம்’ தந்த உமறுப்புலவர், புலவர்களுக்கு கொடுப்பதையே கடமையாக கருதிய வள்ளல் சீதக்காதி செய்குத் தம்பி பாவலர், குணங்குடி மஸ்தான் சாகிபு, கவி கா.மு.ஷெரீப், நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில். இப்படி பல்வேறு இஸ்லாமிய இலக்கிய பெருமக்கள் தமிழுக்கு தொண்டாற்றி இருக்கிறார்கள். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு என்று 9 நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது. ‘இணைப்பே இலக்கியம்’ என்பதை இந்த மாநாட்டின் நோக்கமாக வைத்திருக்கிறீர்கள். இந்த காலத்திற்கு தேவையான இணைப்புதான். இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இதயங்களுக்கும் தேவையான இணைப்புதான், இப்படிப்பட்ட இணைப்பை, இலக்கியங்களும் இதுபோன்ற இலக்கிய மாநாடுகளும் உருவாக்கவேண்டும். நிச்சயம் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். தமிழ் நம்மை இணைக்கும். இலக்கியம் நம்மை இணைக்கும், எனவே, தமிழால் நாம் இணைவோம், தமிழர்களாய் நாம் இணைவோம், இதயங்களால் இணைவோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post இஸ்லாமியர்களுக்கு சலுகைகளும், உரிமைகளும் வழங்கியது திமுக அரசு: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Chief Minister ,MK Stalin ,World Islamic Tamil Literature Conference ,Trichy ,Muslims ,9th World Islamic Tamil Literature Conference ,Engineering College ,Guntur, Trichy… ,Dinakaran ,
× RELATED ஆங்கில புத்தாண்டு...