தர்மசாலா: எல்லையில் போர் பதற்றம் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், தர்மசாலாவில் நேற்று நடந்த பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் திடீரென நிறுத்தப்பட்டது. ஐபிஎல் 18வது தொடரின் 58வது லீக் போட்டி நேற்று இமாச்சல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் நடந்தது. இதில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியான்ஸ் – பிரப்சிம்ரன் களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி 10 ஓவரில் 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிரியனாஷ் ஆர்யா 70 ரன் (34 பந்து, 6 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்து நடராஜன் பந்து வீச்சில் அவுட்டானார். பிரப்சிம்ரன் 50 ரன் (28 பந்து, 7 பவுண்டரி) எடுத்து களத்தில் இருந்தார். நடராஜன் அடுத்த பந்து வீச இருந்த நிலையில், மைதானத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.
மைதானம் திடீரென இருளில் மூழ்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆட்டமும் திடீரென நிறுத்தப்பட்டு, வீரர்கள் பெவிலியன் திரும்பினர். நேற்றிரவு ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் எல்லை உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மற்றும் போர் விமான தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் அதை இந்தியா வெற்றிகரகமாக நடுவானில் அழித்தது. பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்க எல்லையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் போட்டியில் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ராணுவ அதிகாரிகளுடன் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, பாதுகாப்பு காரணங்களால் உடனடியாக வீரர்களை வெளியேற ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, வீரர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
The post எல்லையில் பயங்கர சண்டை பஞ்சாப்-டெல்லி போட்டி ரத்து; மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மைதானம் appeared first on Dinakaran.
