×

நடப்பாண்டு 5 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் ரூ.635.17 கோடியில் 34,250 பேரை தொழில் முனைவோராக்க இலக்கு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அறிவிப்புகள் குறித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று கிண்டியில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: சிட்கோவை பொறுத்தவரை இதுவரை ரூ.364.93 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.643.18 கோடி மதிப்பில் 22 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த தொழிற்பேட்டைகளில் முதல் கட்டப்பணிகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடித்து திறப்பு விழாவிற்கு கொண்டுவர வேண்டும். தொழில் வணிகத்துறை மற்றும் சிட்கோவினால் செயல்படுத்தப்படும் குறுங்குழும திட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டமாகும். அதில் ரூ.44.14 கோடி மானியத்தில், ரூ.54.08 கோடி திட்ட மதிப்பீட்டில் இதுவரை 11 குறுங்குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டினை கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட கலைஞர் கடன் உதவி திட்டத்தில் 30 பேருக்கு தொழில் தொடங்க ரூ.4.47 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும். அதுபோல், கலைஞர் கைவினை திட்டத்திலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் எய்தி, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும். எம்எஸ்எம்இ துறையால் செயல்படுத்தப்படும் 5 வகையான சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் நடப்பு ஆண்டு ரூ.635.17 கோடி மதிப்பில் 34,250 பேரை தொழில்முனைவோர்களாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு இறுதி வரை காத்திருக்காமல், 6 மாத காலத்திற்குள் இலக்கை அடைய வேண்டும். விண்ணப்பங்கள் மீது காலதாமதம் இன்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களின் அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி இதுவரை ரூ.25,748 கோடி மதிப்பில் 2,373 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிறுவனங்களை தொடங்க மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நடப்பாண்டு 5 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் ரூ.635.17 கோடியில் 34,250 பேரை தொழில் முனைவோராக்க இலக்கு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Tha.Mo.Anparasan ,Chennai ,Guindy ,Micro, Small and Medium Enterprises ,Micro, Small and Medium Enterprises Department ,CITCO… ,Target ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி,...