×

ஆத்தூர் அருகே பரபரப்பு மயங்கி கிடந்த ஆட்டின் இறைச்சியை சாப்பிட்ட 19 பேருக்கு வாந்தி, மயக்கம்

*அரசு மருத்துவமனையில் சிகிச்சை

*சுகாதாரத்துறை இணை இயக்குனர் விசாரணை

கெங்கவல்லி : ஆத்தூர் அருகே, மயங்கி கிடந்த ஆட்டின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 19 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவு மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனை அறுவடை செய்யும் பணிக்காக வெளிமாவட்டத்தில் இருந்து கூலித்தொழிலாளர்கள் இங்கேயே தங்கி, மாதக்கணக்கில் பணி செய்வது வழக்கம். இந்நிலையில், காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த வினோத் என்ற கிழங்கு புரோக்கரின் ஏற்பாட்டில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி பனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மேஸ்திரி தலைமையில் சுமார் 25 பேர், கடந்த அக்டோபர் மாதம் அங்கிருந்து கூலி வேலைக்காக வந்துள்ளனர். இவர்கள் காட்டுக்கோட்டை வடசென்னிமலை முருகன் கோயில் அடிவாரத்தில், வாடகைக்கு வீடு எடுத்து அனைவரும் ஒரே வீட்டில் தங்கி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம், காட்டுக்கோட்டை அருகேயுள்ள சதாசிவபுரம் பகுதியில் உள்ள மணி என்பவரின் விவசாய தோட்டத்தில், மரவள்ளிக் கிழங்கு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, புரோக்கர் வினோத்தின் சகோதரர் யோகேஷ் என்பவரது தோட்டத்தில், மயங்கி கிடந்த ஆட்டை சுத்தம் செய்து, கூலி வேலைக்கு வந்தவர்களிடம் சமைத்து சாப்பிடுவதற்கு கொடுத்துள்ளனர். இதை வாங்கிய தொழிலாளர்கள், வீட்டுக்கு எடுத்து ெசன்று கூடுதலாக கோழிக்கறியையும் வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில், குழந்தைகள் உள்பட 19 பேருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அனைவருக்கும் காய்ச்சல், மயக்கம், வாந்தி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்ததால், நேற்று காலை 9 மணியளவில் அங்கிருந்து வாகனத்தில், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையை தொடங்கினர். ரமேஷ்(45), ரவீந்திரன்(30), அய்யனார்(30), பிரகாஷ்(17), குமரகுரு(15), இசைமாறன்(16), குணசேகரன்(13), முருகன்(50), சஞ்சீவ் காந்தி(40), சஞ்சீவி(15), நவநீதம்(35), தீபிகா(13), லட்சுமி(35), தேவி(42), மேஸ்னா(13), திருச்செல்வி(15), கலைவாணி(30), ரிஸ்வந்த்(5) உள்ளிட்ட குழந்தைகள் உட்பட 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த தகவலறிந்த ஆத்தூர் சுகாதாரத்துறை இணை இயக்குனர் யோகானந்தன், நல்லதம்பி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களிடம் நேரில் நலம் விசாரித்தனர். மேலும், மருத்துவ குழுவை அமைத்து, காட்டுக்கோட்டை வடசென்னிமலை கூலி தொழிலாளர்கள் சமைத்த கறி குழம்பு, அப்பகுதியில் உள்ள குடிநீர் ஆகியவற்றை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதி முழுவதும் குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டது. இது குறித்து ஆத்தூர் ஊரக இன்ஸ்பெக்டர் (பொ) அழகுராணி தலைமையில், போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Attur ,Kengavalli ,Attur government ,
× RELATED தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும்...