*விருதுநகர் அருகே பரபரப்பு
விருதுநகர் : விருதுநகர் அருகே நடுரோட்டில் மினிலாரி கவிழ்ந்து 60 ஆயிரம் முட்டைகள் உடைந்தன. நாமக்கல்லில் இருந்து கோழி முட்டைகளை ஏற்றிய மினி லாரி, நாகர்கோவில் நோக்கி நேற்று புறப்பட்டது. நேற்று மாலை விருதுநகர் அருகே நான்குவழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.
ஆர்.ஆர்.நகர் அருகே சென்ற போது திடீரென லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த 60 ஆயிரம் முட்டைகளும் சாலையில் உடைந்து ஆறாக ஓடியது. தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயமடைந்த லாரி டிரைவர் சுதாகரை(30), விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லாரி கவிழ்ந்து 60 ஆயிரம் முட்டைகளும் உடைந்து சாலையில் ஓடியதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.
இதனால் போலீசார் சாலை முழுவதும் தண்ணீரை ஊற்றி முட்டை கழிவுகளை சுத்தம் செய்தனர். விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் நான்குவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
