மதுரை, மே 6: மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, குற்றச்சம்பவங்களை கண்காணிக்க 200 இடங்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையில் இறங்குதல் போன்ற முக்கிய விழா நாட்களில் ட்ரோன் காமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன், சுவாமி காலை, மாலை நேரங்களில் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதன்படி இன்று (மே 6) பட்டாபிஷேகம், நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை திக்விஜயம், மே 8ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, வடக்கு ஆடி, மேற்கு ஆடி வீதிகளில் பிரம்மாண்டமான செயற்கை பூப்பந்துகளால் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் மே 8ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59க்குள் கோயிலில் வடமேற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மேடையில் நடக்கிறது. இதனை 20 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கு வசதியாக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தல் மற்றும் மண மேடை பகுதிகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
The post மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் 200 சிசிடிவி காமிராக்கள் அமைப்பு 35 உயர்மட்ட கோபுரங்கள் appeared first on Dinakaran.
