மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருன்டோலோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் லொரென்ஸோ முஸெட்டியை வீழ்த்தி பிரிட்டன் வீரர் ஜேக் அலெக்சாண்டர் டிரேப்பர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், ஜேக் டிரேப்பர், கேஸ்பர் ரூட் இடையிலான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இப்போட்டியில், அபாரமாக செயல்பட்ட கேஸ்பர் ரூட், முதல் செட்டில் வென்றபோதும், இரண்டாவது செட்டை கோட்டை விட்டார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் சுதாரித்து சிறப்பாக ஆடி அந்த செட்டையும் கேஸ்பர் கைப்பற்றினார். அதனால், 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட் வென்று சாம்பியன் பட்டத்தையும் பரிசுக் கோப்பையையும் கைப்பற்றினார். அவருக்கு பரிசுத் தொகையாக, ரூ.9.5 கோடி வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஜேக் டிரேப்பருக்கு, ரூ.5 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.
The post மாட்ரிட் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ்‘ட்ராப்’பில் சிக்கிய டிரேப்பர் சாம்பியன் ஆன கேஸ்பர் appeared first on Dinakaran.
