சென்னை: ஓஎம்ஆர் – இசிஆர் இணைப்பு சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.
இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலை இரண்டிற்கும் இடையில் சரியான இணைப்பு சாலைகள் என்பது தற்போது வரை இல்லை. ஆங்காங்கே உள்ள சிறிய சிறிய தெருக்கள், சாலைகள் மூலம் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடந்து செல்ல வேண்டியுள்ளது. இவை பல இடங்களில் மிகவும் குறுகலாகம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளாக இருக்கின்றன. மேலும் திருவான்மியூர், சோழிங்கநல்லூர் என இரண்டு இடங்களில் பாலங்களுடன், இணைப்பு சாலைகள் உள்ளன.
இந்த இணைப்பு சாலைகளை அடைய, பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இந்த இடத்தை அடைய வேண்டுமென்றால், 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செலவிட வேண்டிய சூழல் உள்ளது. இதனைத் தொடர்ந்து இசிஆர் – ஓஎம்ஆர் இணைப்புச் சாலை அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு செல்பவர்களுக்கு, இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் வேளச்சேரி, பள்ளிக்கரணை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் எளிதாக செல்ல முடியும். அதன்படி ரூ.35 கோடியில் ஓஎம்ஆர் – இசிஆர் சாலையை இணைக்க நீலாங்கரை மற்றும் துரைப்பாக்கம் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ராஜீவ்காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் புதிய இணைப்பு சாலை பணியில் ராஜீவ் காந்தி சாலை முதல் பக்கிங்காம் கால்வாய் வரை உள்ள சாலை பணி ரூ.18.25 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாய் முதல் இசிஆர் சாலை வரை உள்ள இணைப்பிற்கு நில எடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எஞ்சியுள்ள பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
துரைப்பாக்கம் அருகே ஓ.எம்.ஆர் சாலையில் 670 மீட்டர் தூரப் பகுதி, பக்கிங்ஹாம் கால்வாய் குறுக்கே 50 மீட்டர் நீள பாலம், நீலாங்கரை அருகே ஈ.சி.ஆர் சாலையில் 680 மீட்டர் தூரப்பகுதி என பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக முதற்கட்டமாக ஓஎம்ஆர் சாலை பகுதியில் 800 மீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டது. எஞ்சிய இரண்டு இடங்களில் நீண்ட காலமாக பணிகள் முடங்கி கிடைந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தற்போது அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோல் 4 மீட்டர் உயரத்திற்கு பாலம் கட்டுவதற்கு ஒன்றிய கப்பல் கட்டுமானத் துறையின் கீழ் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதையொட்டி ரூ.35 கோடி டெண்டர் கோரப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஓஎம்ஆர் – இசிஆர் இணைப்பு சாலை நிலம் எடுக்கும் பணிகள் நிறைவு: கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.
