×

யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது: செல்வபெருந்தகை பேச்சு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ‘அரசியலமைப்பை காப்பாற்றுவோம்’ என்ற தலைப்பில் அரசியல் மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், கட்சியின் பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினர். கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை மாநாட்டுக்கு தலைமை வகித்து, ‘இந்திய அரசியலமைப்பு’ புத்தகத்தை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வழங்கி ‘ஒருமித்த குரலோடு, ஒற்றுமையான கைகளோடு இந்திய தேசத்தை பாதுகாப்போம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாநாட்டில் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது: ஆடு நனைகிறது என ஓநாய் அழுததாம். அதேபோல் தேச மக்களை பார்த்து மோடி வருத்தப்படுகிறார். காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கானது. ஆனால், பாஜ கொண்டு வந்த திட்டங்கள் அம்பானிக்கும், அதானிக்குமானது. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் உள்ள வேறுபாடு. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜவஹர்லால் நேரு கொண்டு வந்த பல திட்டங்களை தனியாரிடம் ஒப்படைக்கிறார் மோடி. பாஜ ஆட்சியில் 50 சதவீதத்துக்கு மேல் தேசத்தில் ஒவ்வொரு குடிமகன் மீதும் கடன் சுமத்தப்பட்டிருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுத வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டமாகும். ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு பழக்கம் என ஆர்எஸ்எஸ் திட்டங்களை நிறைவேற்றவும், அதன்மூலம் ஹிட்லர் ஆட்சியை இந்தியாவில் கொண்டுவரவும் மோடி துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது. அங்கே தான் அம்பேத்கர் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். மோடி ஆட்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. பாஜ ஆட்சி தூக்கி எறியப்படும் நாள் வரப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாநாட்டில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசுகையில்,“ நாட்டில் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அமலாக்கத்துறையும், சிபிஐயும் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் பெரியளவில் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அங்கெல்லாம் அமலாக்கத்துறை செல்லாமல், தமிழகத்துக்கு வருகிறது.

தேர்தல் ஆணையமும் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது. இதையெல்லாம் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இந்த ஆட்சியாளர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள். ஆளுநருக்கு எதிராக பெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பல்வேறு வழிகளில் அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கும் மோடி அரசை எதிர்க்கும் வழியை இந்திய மக்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி,

எம்.பி.க்கள் ராபர்ட் புரூஸ், சசிகாந்த் செந்தில், சுதா, எம்.எல்.ஏ தாரகை கத்பட், முன்னாள் எம்.பி.க்கள்‌ ராமசுப்பு, பீட்டர் அல்போன்ஸ், டாக்டர் செல்லக்குமார், துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச்செயலாளர்கள் டி.செல்வம், தளபதி பாஸ்கர், ஆலங்குளம் காமராஜ், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாவட்ட தலைவர்கள் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன், சிவ ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், ஜெ.டில்லி பாபு, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மனித உரிமை பிரிவு தலைவர் மகாத்மா சீனிவாசன், மற்றும் ரங்கபாஷ்யம், தாம்பரம் நாராயணன், தென்காசி பி.பாக்யராஜ், மாநில எஸ்.சி. துறை பொதுச் செயலாளர் மா. வே மலையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது: செல்வபெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Selvaperundhagai ,Chennai ,save ,Tamil Nadu Congress Party ,Congress Ground ,Teynampet, Chennai ,Legislative Assembly Congress ,President ,S. Rajeshkumar ,Ruby R. Manoharan ,Dinakaran ,
× RELATED தமிழக கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை: 8ம் தேதி முதல் கனமழை