×

மதுராந்தகத்தில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு தமிழகம் முழுவதும் 5ம்தேதி கடைகளுக்கு விடுமுறை: விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: மதுராந்தகத்தில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டையொட்டி வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது வணிகர் தின மாநில மாநாடு வரும் மே 5ம் தேதி மதுராந்தகத்தில் மிக பிரமாண்டமாகவும், வணிக வரலாற்றில் அடையாளப்படுத்தும் விதமாகவும் மாலை 3.35 மணிக்கு நெல்லை எம்.ஆர்.எஸ்.சுப்பிரமணியம் நினைவு அரங்கில் நடக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு முதன்மையாளராக பங்கேற்கிறார். மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார்.

மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்கிறார். மாநாட்டு பிரகடன தீர்மானங்களை மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லாவும், பொது தீர்மானங்களை மாநில தலைமைச்செயலாளர் ராஜ்குமாரும் முன்மொழிகின்றனர். மாநாட்டில் திரளும் லட்சக்கணக்கான வணிகர்களின் வசதி கருதி, மதுராந்தகத்தில் 29 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது, இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் காஞ்சி மண்டல தலைவர் எம்.அமல்ராஜ், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபாகர் ஆகியோர் தலைமையில் துரிதமாக நடந்து வருகிறது.

மே 5ம் தேதி 42வது வணிகர் தினம் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடாக நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள், உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post மதுராந்தகத்தில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு தமிழகம் முழுவதும் 5ம்தேதி கடைகளுக்கு விடுமுறை: விக்கிரமராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Traders' demand ,Madurantakam ,Tamil Nadu ,Vikramaraja ,Chennai ,Traders' Association ,President ,Traders' Demand Declaration Conference ,Traders' Association of Tamil Nadu Traders' Associations… ,Traders' ,demand ,Dinakaran ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...