×

குற்ற உணர்ச்சியால் பிராயச்சித்தம் தேடினேன்: நடிகர் அஜித் குமார் பரபரப்பு பேட்டி

சென்னை: குற்ற உணர்ச்சியால் பிராயச்சித்தம் தேடினேன் என நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார். நடிகர் அஜித் குமார் சமீபத்தில் புதுடெல்லியில் பேட்டி தந்தார். நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர் மீடியாவுக்கு கொடுத்த பேட்டி இது. இதில் அவர் கூறியது: ‘வாலி’ எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். என்னை அந்தப் படத்தில் இருந்துதான் மக்கள் என்னை ஒரு தொழில்முறை நடிகர் என்று பார்க்க ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த படத்திற்கு முன்பு மக்கள் மத்தியில் இருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்தது. ஆனால் ‘வாலி’ படம் தான் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டது.

நான் ஆக்ஸிடென்டல் நடிகன்தான். எப்போது ஓய்வு பெறுவேன் என திட்டமிடவில்லை. ஆனால் வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். எதுவும் நிரந்தரம் இல்லை. வாழ்க்கை குறித்து குறை சொல்பவர்களைப் பார்க்கிறேன். மறுநாள் காலை எழுந்ததும் உயிரோடு இருப்பது என்பது மிகப்பெரிய வரம். நான் இதை தத்துவார்த்தமாக கூறவில்லை. நான் நிறைய காயங்களையும் அறுவை சிகிச்சைகளையும் எதிர் கொண்டுள்ளேன். புற்றுநோயில் இருந்து தப்பிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளார்கள். உயிரோடு இருப்பது எவ்வளவு மதிப்பு மிக்கது என்று எனக்குத் தெரியும். எனவே, எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

நான் ‘பிங்க்’ படத்தின் (நேர் கொண்ட பார்வை) ரீமேக்கில் நடிக்க காரணம் எனது முந்தைய படங்கள் எனக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கின. பெண்களை ஸ்டாக்கிங் செய்வதை ஊக்குவிப்பதை போல அந்த படங்கள் இருப்பதாக உணர்ந்தேன். சில நேரங்களில் ரசிகர்கள் நாம் திரையில் செய்வதை பின்பற்ற நினைக்கிறார்கள். பிங்க் ரீமேக்கில் நடிப்பது என்பது எனது முந்தைய படங்களுக்கு பிராயச்சித்தமாக இருக்கும் என்று நினைத்து நடித்தேன்.

எனது இளமை காலத்தில், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்த விளையாட்டு என்று எனது அப்பா சொன்னது நினைவில் இருக்கிறது. அந்த போட்டியில் நீ கலந்து கொள்ள என்னால் பணம் கொடுக்க முடியாது. நீ அந்த போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் உன்னைத் தடுக்க மாட்டேன். உனக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும். உனக்கான வழியை நீயே கண்டுபிடிக்க வேண்டும் என்று எனது அப்பா சொன்னார்.

நான் மோட்டார் ஸ்போர்ட்ஸில் கலந்து கொண்ட போது, ஒருவர் என்னைச் சந்தித்து அவரது விசிட்டிங் கார்டைக் கொடுத்து, மாடலிங்கில் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறினார். முதலில் நான் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்றுதான் முயற்சி செய்தேன். மாடலிங் என்றால் என்ன என்று புரிவதற்கு முன்னரே, எனக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. செய்தித்தாள்கள், வார இதழ்களில் வரும் விளம்பரங்கள், டிவி விளம்பரங்கள், மாடலிங் மூலம் சம்பாதித்த அனைத்து பணத்தையும் நான் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்காக செலவு செய்தேன். இவ்வாறு அஜித் குமார் கூறினார்.

The post குற்ற உணர்ச்சியால் பிராயச்சித்தம் தேடினேன்: நடிகர் அஜித் குமார் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,Chennai ,New Delhi ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...