- டிடீவி
- OPS
- சடபாடி பழனிசாமி
- நயினார்
- சசிகலா
- சென்னை
- ஆதிமுகா
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- பஜா
- ஜனாதிபதி
- நயினார் நாகேந்திரன்
- பன்னீர் செல்வம்
- எடப்பாடி பழனிசாமி
- நைனார்
- தின மலர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒன்று சேர்ந்து, தாங்கள் பழி வாங்கப்பட்டதை பழி தீர்க்க, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி, சசிகலா ஆகியோரை அரசியலில் இருந்து முற்றிலும் ஓரங்கட்ட அதிரடி திட்டம் வகுத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அதிமுகவும், பாஜவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்தன. இரு கட்சிகளின் தலைவர்களும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. இதனால் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு மோதலில் ஈடுபட்டதால் கூட்டணி உடைந்தது. மக்களவை தேர்தலில் படுதோல்வியை இரு கட்சியினரும் சந்தித்ததால், இரு கட்சிகளும் தனித்தனியாக சட்டப்பேரவை தேர்தலுக்கு கூட்டணி அமைக்க முயன்றனர். ஆனால் திடீரென்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்துப் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார். அப்போது அண்ணாமலையை மாற்ற வேண்டும், அமலாக்கப் பிரிவு வழக்குகளில் இருந்து தன்னையும் தன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்தால் கூட்டணிக்குத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனால் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவிய நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக்க அமித்ஷா முடிவு செய்து, சென்னைக்கு வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கூட மாநில தலைவர் அறிவிப்பு வருவதற்கு முன்னர் பேட்டியை தொடங்க அமித்ஷா முடிவு செய்தார். ஆனால் புதிய மாநில தலைவர் அறிவிப்பு வந்தால்தான் பேட்டி அளிக்க வர முடியும் என்று அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதனால் நயினாரை மாநிலத் தலைவராக அமித்ஷா அறிவித்தார். இதன் மூலம் தனக்கு எதிராக செயல்பட்ட அண்ணாமலையை தமிழக அரசியலில் இருந்து எடப்பாடி பழனிசாமி, தூக்கி வீசினார். அதேநேரத்தில், அவருக்கு பெரிய குடைச்சலாக இருப்பது, அதிமுகவில் இருந்து வெளியே சென்ற சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்தான் என்று அவர் கருதுகிறார். இதனால் அவர்கள் 3 பேரையும் அரசியலில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்ட அவர் அதிரடி திட்டம் வகுத்திருக்கிறார். அந்த திட்டத்தின்படி நயினாருடன் தனது தூதர்கள் மூலம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அரசியலுக்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நயினார் நாகேந்திரனும், சசிகலா, டிடிவி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே சமூகத்தினர்.
நயினாரை வளர்த்து விட்டது அவர்கள்தான். இதனால் இவர்கள் 3 பேரும் மீண்டும் அமித்ஷா ஆதரவுடன் அதிமுகவில் சேர்ந்து விடுவார்கள் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையிலேயே நயினாரை அதிமுகவில் இருந்து ஓரங்கட்டியது சசிகலாதான் என்பது அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் என்கின்றனர் அதிமுகவினர். நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த நயினார், அந்த மாவட்டத்தில் செல்வாக்காக இருந்த கருப்பசாமி பாண்டியனிடம் உதவியாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அப்போது, மதுபான பார் உரிமம் வாங்கி நடத்தினார். குவாரி தொழிலில் இறங்கினார். பின்னர் சின்ன சின்ன வேலைகளை செய்தவர், பணகுடி ஒன்றிய செயலாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். 2001ம் ஆண்டு நெல்லை தொகுதியில் சசிகலா ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மீது நம்பிக்கை வைத்து முதலில் போக்குவரத்து துறையை ஜெயலலிதாவிடம் சொல்லி சசிகலா வாங்கிக் கொடுத்தார். பதவி ஏற்றவுடன் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர் பின்னால் சுற்ற ஆரம்பித்தனர். நெல்லையைச் சேர்ந்த சமூக மக்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர்.
இதனால் உஷார் ஆன டிடிவி தினகரன், சசிகலாவிடம் நயினார் பற்றி, ‘‘இவர் திருநாவுக்கரசு போல வளர்ந்து தலைவராகி நமக்கு குடைச்சல் கொடுப்பார்’’ என்று போட்டுக் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் சசிகலாவும், நயினாரை பதவியில் இருந்து தூக்கும்படி ஜெயலலிதாவிடம் கூற ஆரம்பித்தார். ஆனால், பதவி ஏற்ற ஆண்டிலேயே போக்குவரத்து துறையில் இருந்து மின்சாரத்துறை அமைச்சர் பதவியை ஜெயலலிதா வழங்கினார். நயினார் பற்றி ஜெயலலிதாவிடம் சசிகலா தவறாக சொல்ல ஆரம்பித்தவுடன், ஜெயலலிதா, இவருக்கு ஆதரவாக மாறினார். இதனால் மின்துறையை வழங்கிய கொஞ்ச நாட்களில் கூடுதலாக தொழில் மற்றும் ஊரகத் தொழில்துறை பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. நயினார் பவர்புல் அமைச்சராக மாறியதும், சசிகலா மற்றும் டிடிவிக்கு மேலும் இது எரிச்சலை ஏற்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி ஆதரவுடன் செயல்பட்டு வந்தார். 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் உள்கட்சி மோதலில் அதாவது சசிகலா, டிடிவி, பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் நயினாரை தோற்கடித்தனர். பின்னர் 2011ம் ஆண்டு மீண்டும் நெல்லை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அப்போது தனக்கு மீண்டும் முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் சசிகலாவோ, அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவிடாமல் செய்து விட்டார். இதனால் அதிமுக ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. பின்னர் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்தார். கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார். ஜெயலலிதாவை நெருங்க விடாமல் சசிகலா பார்த்துக் கொண்டார். சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததால், மக்களவை தேர்தலுக்கு சீட் கேட்டார். அந்த சீட்டையும் கிடைக்கவிடாமல் சசிகலா செய்து விட்டார். சசிகலாவை பின்னால் இருந்து இயக்கியது டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்தான் என்று நயினார் உறுதியாக நம்பினார். இந்நிலையில்தான், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். பின்னர் அவரையும் மாற்றிவிட்டு எடப்பாடி பழனிசாமியை சசிகலாவும், டிடிவி தினகரனும் சேர்ந்து முதல்வராக்கினர். அப்போது நயினாரை கட்சியில் இருக்கும் இடம் தெரியாமல் சசிகலா செய்து விட்டார். இதனால் எப்படியும் அதிமுகவில் இருப்பது வேஸ்ட் என்பதை உணர்ந்த நயினார் நாகேந்திரன், சசிகலா, டிடிவி ஆகியோரை எதிர்த்துதான், கட்சியில் இருந்து விலகி, 2017ம் ஆண்டு பாஜவில் சேர்ந்தார். இப்போது பாஜவின் மாநிலத் தலைவராகிவிட்டார்.
அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிரியாக இருப்பது சசிகலா மற்றும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர். எதிரிக்கு, எதிரி நண்பன் என்பதுபோல எடப்பாடியும், நயினாரும் சேர்ந்து இவர்கள் 3 பேரையும் முழுமையாக அரசியலில் இருந்து ஓரம் கட்ட திட்டம் வகுத்து செயல்படத் தொடங்கியுள்ளனர். அமைச்சர் பதவியை தடுத்து, கட்சிப் பதவியைப் பறித்த சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், தற்போது அதிமுகவில் தங்களை சேர்த்துவிடும்படி நயினாரிடம் காத்து நிற்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. இதுவரை அண்ணாமலையை எரிமலைபோல நம்பி இருந்தனர். ஆனால் அவர் எரிமலை இல்லை. பாஜவில் வெறும் பணிமலைதான் என்று தற்போது தெரிந்து விட்டதால், அவர்கள் 3 பேருமே என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். யாரிடம் போய் உதவி கேட்பது என்று தெரியாமல் உள்ளனர்.அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி, நயினார் ஆகியோரை கட்சியில் இருந்து ஓரங்கட்ட நினைத்த 3 பேரையும் அரசியலில் இருந்து அடியோடு அழிக்கும் பணியை இருவரும் தொடங்கிவிட்டனர். அதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துள்ளது. விரைவில் அவர்கள் 3 பேரும் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டிய நிலை ஏற்படும். இல்லாவிட்டால் அவர்கள் சீமானுடன் கூட்டணி சேர வேண்டிய நிலை உருவாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
The post பாதிக்கப்பட்ட இருவரும் கைகோர்த்தனர் டிடிவி, ஓபிஎஸ், சசிகலாவை ஓரம்கட்ட எடப்பாடி பழனிசாமி, நயினார் கூட்டு முடிவு: பழைய பழியை தீர்க்க அதிரடி திட்டம் appeared first on Dinakaran.
