×

சென்னை விஐடி பல்கலை மற்றும் தமிழியக்கம் சார்பில் பாரதிதாசன் பிறந்தநாள் உலக தமிழ் தினமாக அறிவிப்பு

சென்னை: சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் தமிழியக்கம் மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் – அமெரிக்கா, அனைத்திந்தியத் தமிழ் சங்கப் பேரவை, லெமூரியா அறக்கட்டளை – மும்பை, கருநாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பிறந்தநாள் உலகத் தமிழ்நாளாக அறிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு விஐடி வேந்தரும், தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்தார்.

விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.  விழாவில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பிறந்த நாளை உலகத் தமிழ்நாளாக விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் அறிவித்தார். அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். விழாவில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், ‘பெரியார் கொள்கையை அப்படியே கவிதை வடிவில் கொண்டு வந்தவர் பாரதிதாசன்.

தமிழக அரசு மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். மொழிப்பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எந்த மொழியை படிக்க வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்பதை யெல்லாம் அரசாங்கம் முடிவு செய்யாமல் மாணவர்கள், பெற்றோர்களிடம் விட்டுவிட வேண்டும். உயர்கல்வியில் இந்தியா பின்தங்கியுள்ளது. கல்வியை கொடுத்தால் சமுதாயம் மாறிவிடும். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு கூடுதலாக செலவழிக்க வேண்டும். நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் களையப்பட வேண்டும். தமிழக அரசு பாரதிதாசன் பிறந்தநாளினை உலக தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, “அம்பேத்கர், பெரியார் போன்றோரின் பணிகளை இலக்கிய துறையில் நின்று பாராதிதாசன் ஆற்றியுள்ளார். வட சொல் தமிழ் மொழியில் நுழைகிறது என்றால் அந்த சொல் வழியாக சிந்தனைகள் நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றது என்று அர்த்தம். புரட்சிகவிஞர், பெரியார், அம்பேத்கர் முன்னெடுத்த அரசியல் இந்த மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசு மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்நாடு முன்னேற்றத்திற்கும் திராவிட இயக்கங்கள் செய்த போராட்டங்கள், அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விளக்கிப் பேசினார். முன்னதாக, பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் எழுதிய “நெருஞ்சி மலர்க் காட்டிடையே” என்ற புத்தகத்தை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட வைகோ பெற்றுக்கொண்டார்.

The post சென்னை விஐடி பல்கலை மற்றும் தமிழியக்கம் சார்பில் பாரதிதாசன் பிறந்தநாள் உலக தமிழ் தினமாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai VIT University ,Tamiliyakkam ,Bharathidasan ,World Tamil Day ,Chennai ,Revolutionary Poet Bharathidasan Tamil Mandram ,America ,All India Tamil Sangam Peravai ,Lemuria Foundation ,Mumbai ,Karnataka Tamil Journalists Association… ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...