×

ராதாபுரம் தொகுதியில் 13 ரேஷன் கடைகள் புதிதாக திறக்க அனுமதி: சபாநாயகர் அப்பாவு தகவல்

பணகுடி, ஏப்.28: ராதாபுரம் தொகுதியில் புதியதாக 13 ரேஷன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 35க்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கடைகளை கடந்த 4 ஆண்டுகளாக அரசிடம் இருந்து அனுமதி பெற்று சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்துள்ளார். அனைத்து புதிய ரேசன் கடைகளுக்கும் ராதாபுரம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிடம் கட்டி கொடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் தொகுதி முழுவதும் கூடுதலாக 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதிதாக ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்போது 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதையடுத்து, கடந்த ஏப்.8ம் தேதி அன்று நடைபெற்ற கூட்டுறவு மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பனிடமும், உணவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணியிடமும், தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, எனக்கும் (ராதாபுரம் தொகுதி) 30க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் நிலுவையில் உள்ளது. அதனை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

உடனடியாக அமைச்சர் சக்கரபாணி, சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று கலெக்டருடன் தொடர்பு கொண்டு தகுதி இருக்கின்ற அனைத்து ரேஷன் கடைகளையும் தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார். இதையடுத்து தற்போது புதிதாக 13 ரேஷன் கடைகளுக்கு அரசிடம் இருந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராதாபுரம் தாலுகா, காவல்கிணறு ஊராட்சி தெற்கு பெருங்குடி பகுதிநேர ரேஷன் கடை (சனி), வள்ளியூர் பேரூராட்சி விசுவாசபுரம் பகுதி நேர ரேஷன் கடை(புதன் மற்றும் ஞாயிறு), ஆனைகுளம் ஊராட்சி வைத்தியலிங்கபுரம் பகுதி நேர ரேஷன் கடை (வியாழன் மட்டும்) வள்ளியூர் பேரூராட்சி பூங்கா நகர் பகுதிநேர ரேஷன் கடை (ஞாயிறு மட்டும்) வள்ளியூர் பேரூராட்சி ராமகிருஷ்ணாபுரம் பகுதி நேர ரேஷன் கடை (சனி மட்டும்), வள்ளியூர் பேரூராட்சி கோட்டையடி பகுதி நேர ரேஷன் கடை (வெள்ளி மட்டும்), ராதாபுரம் ஊராட்சி பாப்பான்குளம் கிளை ரேஷன் கடை(வெள்ளி மட்டும்), தெற்கு கருங் குளம் ஊராட்சி பெரியகுளம் பகுதி நேர ரேஷன் கடை(சனிக்கிழமை மட்டும்), ராதாபுரம் ஊராட்சி பட்டார் குளம் பகுதி நேர ரேஷன் கடை(செவ்வாய் மட்டும்), வள்ளியூர் பேரூராட்சி சுப்பிரமணியபுரம் பகுதி நேர ரேஷன் கடை (புதன் மட்டும்), ராதா
புரம் ஊராட்சி பண்ணையார் குளம் பகுதி நேர ரேஷன் கடை (சனி மட்டும்), தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி, பகுதி நேர ரேஷன் கடை (புதன் மட்டும்), தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி நடு ஆறு புளி பகுதி நேர ரேஷன் கடை (புதன் மட்டும்) என மொத்தமாக 13 கிளை ரேஷன் கடைகளுக்கு அரசாணை எண் 108ன் படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் அரசாணை வெளியிடப்பட்டு புதிதாக கிளை ரேஷன் கடைகள் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஆணைப்படி, துணை முதல்வர், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு சபாநாயகர் வரும் மே மாதத்தில் அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து வைக்கிறார். மேலும் ராதாபுரம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கட்டிடம் அமைத்து கொடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post ராதாபுரம் தொகுதியில் 13 ரேஷன் கடைகள் புதிதாக திறக்க அனுமதி: சபாநாயகர் அப்பாவு தகவல் appeared first on Dinakaran.

Tags : Radhapuram ,Speaker ,Appavu ,Panagudi ,Nellai district ,Dinakaran ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...