×

வேலை செய்த நிறுவனத்தில் ரூ.47 லட்சம் கையாடல் துபாயில் இருந்து சென்னை வந்த வாலிபரை கிளப் டான்சருடன் காரில் கடத்தி தாக்குதல்: சகோதரர் அளித்த புகாரில் போலீசார் மீட்டனர்

சென்னை, டிச.30: திருச்சி சுப்பிரமணியபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (29). இவர், துபாயில் வசித்து வரும் ஜெயமோகன் (38) என்பவர் நடத்தி வரும் மேன் பவர் ஏஜென்சி நிறுவனத்தில் கணக்காளராக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சரத்குமாருக்கு கடந்த 6 மாதங்களாக ஜெயமோகன் சம்பளம் கொடுக்கவில்லை, என கூறப்படுகிறது. இதனால் சரத்குமார் வேலை பார்த்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.47 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயமோகன் துபாயில் சரத்குமார் பழகி வந்த கோவை சரவணம்பட்டியை சேர்ந்த காவியா (21) என்ற கிளப் டான்சர் தங்கியுள்ள இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கிளப் டான்சர் காவியா, சரத்குமாருடன் திருச்சி சென்றது தெரியவந்தது.

உடனே ஜெயமோகன் அபுதாபியில் இருந்து விமானம் மூலம் கடந்த 26ம் தேதி திருச்சி வந்துள்ளார். ஆனால் சரத்குமார் மற்றும் அவரது தோழியான கிளப் டான்சருடன் சென்னைக்கு சென்றது தெரிந்தது. உடனே, ஜெயமோகன் சென்னை உள்ள தனது மைத்துனர் அருண் பாண்டியனுக்கு நடந்த சம்பவத்தை கூறி சரத்குமார் மற்றும் அவரது தோழியை பிடித்து வைக்கும்படி கூறியுள்ளார். அதன்படி கடந்த 26ம் தேதி அருண் பாண்டியன் தனது நண்பர்கள் 3 பேருடன் சென்று சென்னை விமான நிலையம் அருகே சரத்குமார் மற்றும் அவரது தோழியை பிடித்து காரில் ஏற்ற முயன்றனர்.

அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி மவுண்ட் காவல் நிலையத்தில் இருந்து எஸ்ஐ தலைமையில் விரைந்து வந்த போலீசார் காரில் ஏற்ற முயன்ற சரத்குமார் மற்றும் கிளப் டான்சரை மீட்டனர். பிறகு நடந்த சம்பவத்தை அருண்பாண்டியன் புகாராக அளித்தார். அப்போது இருதரப்பும் பணம் தகராறு நாங்களே பேசி தீர்த்துக்கொள்கிறோம் என்று காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். ஆனால் அருண்பாண்டியன், சரத்குமார் தோழியுடன் வெளியே வந்த போது, மீண்டும் அவர்களை காரில் கடத்தி சாலிகிராமம் தனலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து ரூ.47 லட்சத்தை கேட்டு தாக்கியுள்ளனர். இதுபற்றி அறிந்த சரத்குமார் சகோதரர் சரவணகுமார், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு தகவல் அளித்தார். அதன்படி போலீசார் சரத்குமார் செல்போன் சிக்னல் உதவியுடன் விசாரித்த போது, சாலிகிராமம் தனலட்சுமி நகரில் உள்ள திருத்தணிகை பேலஸ் விடுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று கிளப் டான்சர், சரத்குமாரை மீட்டனர். இதுதொடர்பாக கடத்திய அருண் பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai ,Dubai ,Sarathkumar ,Bharathiyar Street, Subramaniapuram, Trichy ,Jayamohan ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்