அரூர், ஏப்.28: மொரப்பூரில் புதர்மண்டி கிடக்கும் ரயில்வே மேம்பால பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், முக்கிய ரயில் போக்குவரத்து மையமாக மொரப்பூர் உள்ளது. சென்னை-சேலம் வழித்தடத்தில் உள்ள மொரப்பூர் ரயில் நிலையம் வழியாக, தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இங்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் நின்று செல்கின்றன. மொரப்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் வசதியாக இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் படிக்கட்டுகளுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. மொரப்பூர் பஸ் நிலையம், சந்தைமேடு, அண்ணல்நகர் பகுதி மக்கள் இந்த நடைபாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைபாதை முறையான பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:
மொரப்பூரில் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் படிக்கட்டுகளுடன் கூடிய நடைபாதை புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. இரவு நேரத்தில் இந்த பகுதியில் தேவையான வெளிச்சம் இல்லை. இதனால் பொதுமக்கள் இதனை பயன்படுத்த முடியாமல் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பால சாலை வழியாக நடந்து செல்கிறார்கள். அந்த பகுதியில் மேம்பால சாலையில் நடந்து செல்பவர்களுக்கு தனி பாதை இல்லாததால் அடிக்கடி விபத்து அபாயமும் ஏற்படுகிறது.
பயன்பாடு இல்லாத இந்த படிக்கட்டுகளில், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதை தடுக்க மேம்பாலத்திற்கு சென்று வரும் இந்த நடைபாதை படிக்கட்டுகளில் உள்ள புதர்களை அகற்றவேண்டும். மேலும், மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படிக்கட்டுகளுடன் கூடிய நடைபாதையை முதியவர்களும் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post புதர் மண்டி கிடக்கும் ரயில்வே மேம்பால பாதை appeared first on Dinakaran.
