×

இந்தியை எதிர்க்கவில்லை அதன் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை யார் என கேட்க நீங்கள் யார்? தமிழ், தமிழ்நாடு என்றால் கசக்கிறது; மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

சென்னை: நாம் இந்தியை எதிர்க்கவில்லை அதன் ஆதிக்கத்தை தான் எதிர்க்கிறோம். அவர்களுக்கு தமிழ், தமிழ்நாடு என்றால் ஏனோ கசக்கிறது. வீரமங்கை வேலுநாச்சியார், மானம் காத்த  மருது பாண்டியர்,  மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரை  யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார் என மொழிப்போர் தியாகிகள் நாள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மொழிப் போர்த் தியாகிகள் நாளை முன்னிட்டு தி.மு.க மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகள் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்று பேசியதாவது: வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற கொள்கை முழக்கத்தோடு தங்களது தேக்குமரத் தேகத்தைத் தீந்தமிழுக்காக ஒப்படைத்த தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். தியாகத்துக்காக – அதுவும் தமிழுக்கான தியாகத்துக்கான நிகழ்ச்சி ஒன்று உண்டென்றால், அதுதான் இந்த சனவரி 25 மொழிப்போர்த் தியாகிகள் நாளாகும். கடந்த ஆறு மாதகாலத்தில் தமிழுக்காகவும் தமிழினத்தின் மேன்மைக்காகவும் எத்தனையோ திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்திக் கொடுத்திருக்கிறது. திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு. ஜெர்மன் நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையானது தொய்வின்றி இயங்க 1 கோடியே 25 லட்ச ரூபாய் நிதி. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.  இவை அனைத்துக்கும் மேலாக தமிழகத்தின் பழம்பெரும் இடங்களில் அகழாய்வு பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். இதுதான் தமிழின் ஆட்சி. இதுதான் தமிழினத்தின் ஆட்சி. இதுதான் பெரியாரும், பாரதிதாசனும், அண்ணாவும், கலைஞரும் விரும்பிய ஆட்சி. நமக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தை வைத்து நாம் இதனைச் செய்தாலும் – ஒன்றிய அரசிடமும் தமிழுக்காகப் போராடியும் வாதாடியும் கோரிக்கை வைத்தும் வருகிறோம்.மாநில ஆட்சிமொழிகள் அனைத்தையும் ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக ஆக்கத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நாம் இன்றும் போராடி வருகிறோம். இந்திய அரசு அலுவலகங்களில் தமிழே அலுவலக மொழியாக இருக்க வேண்டும் என்று வாதாடி வருகிறோம். வழக்காடு மொழியாக தமிழ் வலம் வரவேண்டும் என்று முழங்கி வருகிறோம். இவை அனைத்தும்தான் நாம் யார் என்பதற்கான அடையாளங்கள். இந்தி மட்டுமல்ல, எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல.நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியின் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம். இந்தி மொழியை அல்ல, இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம். தமிழ் மொழிப்பற்றாளர்களே தவிர – எந்த மொழி மீதான வெறுப்பாளர்களும் அல்ல நாம். ஒருவர் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது அவர்களது விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பை தூண்டும் வகையில் திணிப்பாக மாறக் கூடாது. ஆனால் இந்தியைத் திணிக்க நினைப்பவர்கள், அதனை ஆதிக்கத்தின் குறியீடாகவே திணிக்கிறார்கள். ஒரே ஒரு மதம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போல – ஒரே ஒரு மொழிதான் இருக்க வேண்டும் அது இந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்தியைத் திணிப்பதன் மூலமாக இந்தி பேசும் மக்களை அனைத்துத் துறைகளிலும் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியைத் திணிப்பதன் மூலமாக மற்ற மொழி பேசும் மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்ற நினைக்கிறார்கள். ஒருவனின் தாய்மொழியின் இடத்தை பறித்து அந்த இடத்தில் இந்தியை உட்கார வைக்கப் பார்க்கிறார்கள். அதனால்தான் இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம்.அவர்களுக்கு, தமிழ் என்றால், தமிழ்நாடு என்றால் ஏனோ கசக்கிறது. சனவரி 26ம் நாள் அதாவது நாளை குடியரசு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய நாட்டுக்கு மிக முக்கியமான இரண்டு நாட்கள். ஒன்று ஆகஸ்ட் 15 சுதந்திர நாள். மற்றொன்று சனவரி 26 குடியரசு நாள். அந்தக் குடியரசு நாளில், டெல்லியில் நடைபெறும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களுக்குத் திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. வீரமங்கை வேலுநாச்சியாரை – மானம் காத்த மருது பாண்டியரை – மகாகவி பாரதியாரை – கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரை யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார்? பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய மண் தென்னாடு. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு. அவர்கள் சொல்லும் சிப்பாய்க் கலகத்துக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக 1806ம் ஆண்டே வேலூரில் புரட்சி நடந்து விட்டது. அதற்கும் முன்னால், நெற்கட்டுஞ்செவலில் பூலித்தேவன், சிவகங்கையில் வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ராமநாதபுரத்தில் மயிலப்பன், கான்சாகிப் மருதநாயகம், தளபதி சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, அழகுமுத்துகோன், சிவகிரியில் மாப்பிள்ளை வன்னியன், பழனியில் கோபால் நாயக்கர் இப்படிப் பலரும் போராடிய மண் இந்த தமிழ்நாடு. வேலுநாச்சியார் யார்? கட்டபொம்மன் – மருதுபாண்டியர் யார்? வ.உ.சிதம்பரனார் யார் என்று கேட்பவர்களே நீங்கள் முதலில் பிரிட்டிஷ் அதிகாரிகள் எழுதிய வரலாறுகளை படியுங்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பிரகடனம் எழுதி கோயில் சுவரில் ஒட்டி வைத்த மாவீரன் மருதுபாண்டியன். ‘பேரரசர்களுக்கு பணியாளரும் – இழிபிறப்பான பரங்கியருக்கு பரம எதிரியுமான மருதுபாண்டியர்’ என்று கையெழுத்துப் போட்டு வைத்தவன் மருது பாண்டியன்.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்குமேடைக்குச் சென்றபோது அஞ்சா நெஞ்சத்துடன் சென்றதாகவும், தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பார்த்து சிரித்ததாகவும், போரில் இறந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதாகவும் பிரிட்டிஷ் அதிகாரி பானர்மேன் எழுதி இருக்கிறார். வ.உ.சிதம்பரனாரின் பேச்சைக் கேட்டால் பிணம் கூட எழும்’ என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் எழுதி வைத்துள்ளார்கள். இவர் சாதாரண ஆள் அல்ல, பயங்கரமானவர் என்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி எழுதி இருக்கிறார். அத்தகைய சிதம்பரனார், யாருக்கு எதிராகக் கப்பல் ஓட்டினார்? பிரிட்டிஷாருக்கு எதிராகத்தானே? அரசியல்ரீதியாக மட்டுமல்ல, பொருளாதாரரீதியாகவும் பிரிட்டிஷ் அரசை பலவீனப்படுத்த முயன்ற முதல் சுதேசி அல்லவா சிதம்பரனார்? இந்தப் புரிதல் கூட இல்லாதவர்கள் தமிழ்நாட்டை, தமிழை, தமிழர்களின் உணர்வை எப்படி புரிந்துகொள்வார்கள்? 1938ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்ட காலம் முதல் 2022ம் ஆண்டு குடியரசு நாள் விழா வரையில் அவர்களுக்குத் தமிழ்நாட்டைப் புரியவில்லை என்றுதான் சொல்ல முடியும். ராஜாஜி இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து 1965ம் ஆண்டு பேசியாக வேண்டியது இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜிக்கே தமிழர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு 25 ஆண்டுகள் ஆனது என்றால் இன்றைய பா.ஜ.க.வினருக்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. நாம் நமது தமிழினத்தின் மீது மாறாத பற்றுக் கொண்டவர்கள். தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அதற்காக அனைத்து தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள். நாம் அரசியல் இயக்கமாகச் செயல்படுவதும் தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதும் இத்தகைய நோக்கங்களுக்காகத்தான். நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காகவோ – சிலர் அமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காகவோ அல்ல. திமுக ஆட்சியில் இருக்கும் காலம் என்பது அன்னைத் தமிழ் ஆட்சியில் இருக்கும் காலமாக அமைய வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.* தியாகிகள் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதைமொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை  நினைவுகூரும் வகையில் அவர்களது உருவப் படங்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை  செலுத்தினார். தொடர்ந்து பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசன், எம்பிக்கள் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கோவி.செழியன், எழிலரசன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில், தியாகிகளை நினைவுகூரும் வகையில் அவர்களது படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post இந்தியை எதிர்க்கவில்லை அதன் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை யார் என கேட்க நீங்கள் யார்? தமிழ், தமிழ்நாடு என்றால் கசக்கிறது; மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Tamil Nadu, Tamil Nadu ,Chennai ,Tamil ,Tamil Nadu ,Weeramangai ,
× RELATED தமிழகம், புதுவையில் 7 நாட்களுக்கு...