×

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு டீசல் பாட்டிலுடன் வந்த நபரால் பரபரப்பு

தஞ்சாவூர், ஏப்.26: தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் திருவள்ளியங்குடி ஊராட்சியில் கடந்த 2019-20ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்ட திட்டத்தின் கீழ் 30பேருக்கு முறைகேடாக ஊராட்சி மன்ற தலைவர் அழகர், ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் வீடு கட்டியதாக கணக்கு காட்டி வீடு கட்டாமல் பணத்தை பெற்று முறைகேடு செய்துள்ளனர். இது தொடர்பாக திருவள்ளியங்குடி ஊராட்சி பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், தியாகராஜன், வினோத் ஆகிய மூவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் மாவட்ட ஆட்சியரும் ஏப்ரல் 7ம் தேதிக்குள்ளாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திருப்பனந்தாள் பகுதி காவல் ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் தற்போது வரை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாததால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு நேற்று வந்த பாண்டியன் தீக்குளிப்பதற்காக ஒரு பாட்டிலில் டீசல் எடுத்த வந்தார். அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி டீசலை பறிமுதல் செய்தனர். மேலும் பாண்டியன் மற்றும் அவருடன் வந்தவர்களையும் போலீசார் கைது செய்து தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

The post தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு டீசல் பாட்டிலுடன் வந்த நபரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Collector ,Thanjavur ,Thiruvalliyangudi Panchayat ,Thiruppanandal Panchayat Union ,Panchayat ,President ,Azhagar ,Rajkumar ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்