×

நத்தம் சொறிபாறைபட்டியில் ஏப்.30ல் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர், காளை உரிமையாளர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், ஏப். 26: நத்தம் அருகே சேத்தூர் சொறிபாறைபட்டியில் ஏப்.30ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் தங்களது விபரங்களை இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அறிவிக்கையின்படி ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான இணையதளத்தில் (https://dindigul.nic.in) தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். திண்டுக்கல் வருவாய் கோட்டம், நத்தம் வட்டம், சேத்தூர் கிராமம் சொறிபாறைபட்டியில் ஏப்.30ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் கேட்கப்பட்டுள்ள விபரங்களுடன் இணையதளம் (https://dindigul.nic.in) மூலம் ஏப்.27ம் தேதி தேதி காலை 8 மணி முதல் ஏப்.28ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மேற்படி இணையதளத்தில் தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதிற்கான சான்றிதழ் ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான பதிவுகள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் தங்களது பெயர்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் விதிகளின்படி டோக்கன் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு, டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேற்கண்ட விபரங்கள் இடம் பெறாத இணையதள பதிவுகள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச்சீட்டு இணையதளம் மூலமாகவே அவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நத்தம் சொறிபாறைபட்டியில் ஏப்.30ல் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர், காளை உரிமையாளர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Natham Soriparaipatti ,Dindigul ,Sethur Soriparaipatti ,Natham ,Collector ,Saravanan ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா