புதுக்கோட்டை, ஏப். 24: தினகரன் செய்தி எதிரொலியாக புதுக்கோட்டை ரயில் நிலையத்தை திருச்சி எம்பி துரை வைகோ நேற்று இரவு திடீரென ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மக்கள் தகவல் பரிமாற்றத்திற்காக தமிழ் பேச கற்று கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் ரயில்நிலையத்தில் எந்தவித அடிப்டை வசதிகளும் இல்லாமல் கேட்பாரற்று கிடக்கிறது. குறிப்பாக கழிப்பறை வசதிகள் சிறப்பாக இல்லை. இதனால் பெண் பயணிகள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். ரயில்நிலையம் வெளியிலும் எந்த ஓட்டலும் இல்லை. தண்ணீர் வசதி ஏதும் இல்லை. தாகத்திற்கு பயணிகள் தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் புதுக்கோட்டை நகர் பகுதிக்கு வர வேண்டும். பல இடங்களில் தண்ணீர் பைப்புகள் இருக்கிறது.
ஆனால் பைப்புளில் தண்ணீர் வருவதில்லை. குறிப்பாக புதுக்கோட்டை ரயில்நிலையத்தில் 24 மணி நேரமும் நாய்கள் சுற்றி திரிகிறது. நாய்கள் ரயில் நிலையத்திற்கு உள்ளேயே சுற்றி திரிகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் ரயில்நிலையத்தில் காத்திருக்கின்றனர். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. குறிப்பாக தற்போது வெயில் வாட்டி எடுத்து வருகிறது. போதிய தண்ணீர் வசதி இல்லை போன்ற அடிப்படை வசதிகள் முறையாக அல்லை, என இரண்டு நாட்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு திருச்சி எம்பி துரை வைகோ திடீரென ஆய்வு செய்தார். அப்போது, ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதி, நடைமேடைகள் போன்ற பகுதியில் குடிநீர் இணைப்புகள், கழிப்பறை போன்றவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது, குடிநீர், கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாதது குறித்தும் அங்கிருந்த அலுவலர்களிடம் தனது அதிருப்தியை தெரிவித்தார். அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லாததால் புதுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட பயணிகள் தினந்தோறும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளதால், இந்த ரயில் நிலையத்தில் தற்போதுள்ள நிலைமை குறித்து ரயில்வே அலுவலரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அங்கிருந்த அதிகாரி ஆங்கிலத்தில் பேசியதால் , உள்ளூர் மக்களின் தகவல் பரிமாற்றத்துக்காக தமிழையும் கற்றுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
The post புதுக்கோட்டை ரயில் நிலையத்தை திருச்சி எம்பி துரை வைகோ ஆய்வு appeared first on Dinakaran.
