- கோவில் திருவிழா ஜல்லிக்கட்டு
- திருச்சி
- ஜல்லிக்கட்டு திருவிழா
- செம்பொன்னெருஞ்சி
- திருச்சி, விருதுநகர் மாவட்டம்
- அய்யனார்
- கருப்பண சுவாமி
- அரியநாச்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா...
திருச்சுழி, ஏப். 24: திருச்சுழி அருகே, கோயில் திருவிழா ஜல்லிக்கட்டில் 250 காளைகளுடன் 200 வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் 13 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே, செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் அய்யனார், கருப்பண சுவாமி, அரியநாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக 250க்கும் மேற்பட்ட காளைகளும், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்தனர். நேற்று காலை கோயில் மைதானத்தில் காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் (பொ) தொடங்கி வைத்தார்.
முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடந்தது. அதன்பின் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமார் முன்னிலையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து வாடிவாசலில் இருந்து முதல் காளையாக கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரம் காட்டி திமிலைப் பிடித்து அடக்கினர். இதில் 13 பேர் காயமடைந்தனர். ஒரு சில காளைகள் பிடி கொடுக்காமல் மைதானத்தில் நின்று விளையாடின.
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலையில் நிறைவடைந்தது. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், எவர்சில்வர் குடம், ஏர்கூலர், டேபிள் பேன், மின்சார அடுப்புகள் மற்றும் சீலிங் பேன் உள்பட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. விருதுநகர் எஸ்.பி கண்ணன், திருச்சுழி டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை சுற்றுப்புற கிராம மக்கள் குவிந்து கண்டுகளித்தனர்.
The post திருச்சுழி அருகே கோயில் திருவிழா ஜல்லிக்கட்டு சீறிப் பாய்ந்த காளைகள் தாவி மடக்கிய காளையர் appeared first on Dinakaran.
