×

தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா: 3 ஆயிரம் பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்

கோவை, ஏப். 24: கோவை தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில், சுமார் 3 ஆயிரம் பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

இதைத்தொடர்ந்து, சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சக்தி கரகம், அக்னிசாட்டு புறப்பாடு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதற்காக, பெரிய கடைவீதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். அவர்கள், கோனியம்மன் கோயிலில் இருந்து தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்து ஊர்வலமாக டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு, அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, காலீஸ்வரா மில் ரோடு, சோமசுந்தரா மில் ரோடு வழியாக அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா ரோடு, டிஎன்எஸ்டி டெப்போ, ஜிடி டிரைவிங் பள்ளி வழியாக கோயிலை அடைந்தனர். இதில், சிறியவர்கள், பெரியவர்கள் என பலர் பங்கேற்று அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், கரகம் எடுத்தும் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.

இதில், ஒருவர் 20 அடி நீளத்திற்கு அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினார். இந்த ஊர்வலத்தையொட்டி நகரில் நேற்று காலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 25-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழில் இலட்சார்ச்சனை நடக்கிறது. பின்னர், 27-ம் தேதி நடக்கும் வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

The post தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா: 3 ஆயிரம் பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : DANDUMARIYAMMAN TEMPLE FESTIVAL ,3 THOUSAND WOMEN PROCESSION ,DICHATI HAUNTY ,Covey ,Gowai Dandumariyamman Temple Art Festival ,Dichati Heli ,Dandumariamman Temple Chitra Festival ,Kowai-Avinasi Road Uplipalaya ,Dandumariamman Temple Festival: 3 Thousand Women Devi Procession ,
× RELATED கூலி உயர்வு கேட்டு கறிக்கோழி வளர்ப்பு...