×

வெளிநாட்டு தொழிற்சாலைகளும் வாங்க தயக்கம் முலாம் பழத்துக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

*சின்னசேலம் பகுதியில் அறுவடை தீவிரம்

சின்னசேலம் : முலாம் பழத்துக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சின்னசேலம் வட்டாரத்திற்கு உட்பட்ட மூங்கில்பாடி, எலவடி, நாககுப்பம், கடத்தூர், நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலத்தில் விவசாயிகளால் பரவலாக முலாம் பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த பழம் அதிக நீர்ச்சத்து வகையை கொண்ட பழமாகும். இதனால் கோடை காலத்தில் சாப்பிடும்போது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இந்த பழ வகைகளில் ஏ, சி வைட்டமின்கள் உள்ளது. சீனா, துருக்கிக்கு அடுத்தபடியாக முலாம் பழங்கள் சாகுபடியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

இந்த முலாம் பழம் விதை போட்டு செடி உற்பத்தி செய்து பின் நடவு நட்டு, பாத்திகளில் பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி விடுகின்றனர். இதனால் களை வளருவது தடுக்கப்படுவதுடன், பழங்கள் நீரில் நனையாமல் பாதுகாக்கப்படும்.

மேலும் முலாம் பழம் செடி நட்ட 55 நாட்களில் பழங்களை அறுவடை செய்யலாம். தற்ேபாது கடத்தூர் பகுதிகளில் முலாம்பழங்கள் அறுவடை செய்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஓடைக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி தங்கராஜ் கூறுகையில், ‘கடந்தாண்டு ஒரு ஏக்கருக்கு 15 டன் முதல் 20 டன் வரை விளைச்சல் இருந்தது. அதைப்போல ஒரு டன் ரூ.10,000க்கு விற்பனை இருந்தது. ஆனால் இந்தாண்டு பழ உற்பத்தியும் குறைந்து விட்டது. அதாவது ஒரு ஏக்கருக்கு 10 டன் பழம்தான் அறுவடை செய்ய முடிந்தது.

அதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளும் வாங்க தயங்குகிறது. இதனால் பல விவசாயிகள் உள்ளூரிலேயே சில்லரை விலையில் விற்பனை செய்தனர். அதனால் உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையே கிடைத்தது.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை நிர்வாகம் இணைந்து முலாம் பழம் சாகுபடி விவசாயிகளுக்கு விற்பனைக்கு வழிகாட்ட வேண்டும்’ என்றார்.

The post வெளிநாட்டு தொழிற்சாலைகளும் வாங்க தயக்கம் முலாம் பழத்துக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Moongilpadi ,Elavadi ,Nagakuppam ,Kadtur ,Nallathur ,Dinakaran ,
× RELATED போகி பண்டிகை கொண்டாட்டத்தால்...