×

பி.எச்.டி மாணவர்கள் கட்டண உயர்வு விவகாரம்: பாரதியார் பல்கலையை கண்டித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஏப். 23: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி மாணவர்களுக்கான கட்டணம் உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, மாணவர்கள் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு துறைகளில் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், கடந்த மாதம் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி கட்டணத்தை பல மடங்குகளாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வால் ஆராய்ச்சி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பயோ வேதியியல், தாவரவியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தங்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ள ரசாயனங்கள் சரிவர இரண்டு வருடங்களுக்கு மேலாக கிடைப்பதில்லை. மேலும், கடந்த 2022-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் முடிவு செய்யப்பட்ட அரசு கல்லூரி ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தி உள்ளது. இதனால் அரசு கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்தில் ஆங்கில துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் பத்மநாபன் பிஎச்டி கல்விச்சான்றிதழ் மீது குற்றச்சாட்டுகள் மற்றும் குழப்பங்கள் தொடர்ந்து வருகிறது. அவர் பிஎச்டி வழிகாட்டியாக 2018-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார்.

ஆனால், 2024 டிசம்பர் வரை பிஎச்டி அசல் சான்றிதழ் மற்றும் கல்விச்சான்றிதழ்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இந்நிலையில், அவர் பிஎச்டி வழிகாட்டியாக எப்படி செயல்ப்பட்டு வருகிறார் என தெரியவில்லை. இதனை விசாரிக்க பல்கலைக்கழகத்தில் கமிட்டி அமைக்கப்பட்டது. தற்போது வரை அந்த கமிட்டி எந்த ஒரு அறிக்கையும், நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளான விடுதி, கழிப்பறை, மைதானம், முறையாக இல்லை. 400-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளது. எனவே, ஆராய்ச்சி மாணவர்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், உயர் கல்விதுறையும் தலையிட்டு பல்கலைக்கழகத்தில் நிலவும் ஆராய்ச்சி மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், ஆசிரியர் படிப்பு சான்றிதழ் மீது எழுந்துள்ள புகார் மீது உரிய விசாரணை மற்றும் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் உடனடியாக துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பொறுப்புகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பி.எச்.டி மாணவர்கள் கட்டண உயர்வு விவகாரம்: பாரதியார் பல்கலையை கண்டித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Bharathiar University ,Coimbatore ,Indian Students' Union ,Coimbatore District Collector's Office ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது