கோவை, ஜன. 8: கோவையில் விபத்தில் காலை இழந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை புலியகுளம் அருகே ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (46), தூய்மை பணியாளர். இவர், கடந்த 2022ம் ஆண்டு பைக்கில் அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு கால் செயல் இழந்ததால் மூட்டுக்கு கீழே அகற்றப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டது. வேலைக்கு செல்லமுடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பம் நடத்த முடியாததால், இழப்பீடு வழங்க கோரி கோவை விபத்து வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜயகுமாருக்கு ரூ.23.90 லட்சம் இழப்பீடு வழங்க கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்காததால் அதே கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். வட்டியுடன் சேர்த்து ரூ.25 லட்சம் வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று முன்தினம் காந்திபுரத்தில் இருந்து வெள்ளியங்கிரி ஈஷா செல்லும் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
