×

விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.35,000 பறித்த 3 வாலிபர்கள் கைது

தஞ்சை: விவசாயியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் பறித்த டெல்லியை சேர்ந்த 3 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பாலாயி அக்ரஹாரம், சிரமேல்குடியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். விவசாயி. இவரது செல்போனுக்கு ஒரு போன் கால் வந்தது.

இதில் பேசிய நபர், பள்ளிக்கல்வித்துறையிலிருந்து பேசுவதாகவும், உங்களது மூத்த மகனுக்கு ஸ்காலர்ஷிப் ரூ.14 ஆயிரம் வந்திருப்பதாகவும், அதை வங்கியில் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், வங்கி கணக்கு விவரம், கூகுள் பே எண், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அனுப்புமாறு கூறியுள்ளார். ரவிச்சந்திரனும் அதை நம்பி சம்பந்தப்பட்ட எண்ணுக்கு அனைத்து விவரங்களையும் அனுப்பி உள்ளார். சிறிதுநேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.35,113 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிச்சந்திரன் இதுகுறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இதுதொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஆஷு குமார்(30), சுபம் குமார்(22) மற்றும் அனுஜ் குமார்ஜா(22) ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று அவர்கள் 3 பேரையும் தஞ்சை மாவட்ட நீதித்துறை நடுவர்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

The post விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.35,000 பறித்த 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Delhi ,Ravichandran ,Sremalekudi ,Pattukottai Balayi Agraharam, Thanjavur district ,Dinakaran ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை