திருமலை: வரதட்சணை கேட்டு மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த காதல் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தண்டூர் அடுத்த சாய்பூர் பகுதியை சேர்ந்தவர் அனுஷா(20). அதே பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். இருவரும் கடந்த காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த பெற்றோர் கடந்த மார்ச் 12ம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இதைத்தொடர்ந்து திருமணமான 3 மாதங்களில் இருந்து அனுஷாவிடம் வரதட்சணை கேட்டு பரமேஷ் தகராறு செய்துள்ளார். மேலும் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தம்பதியிடையே மீண்டும் வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த பரமேஷ், அங்கிருந்த கட்டையால் அனுஷாவை சரமாரி தாக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்த அனுஷா மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த பரமேஷ் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.
இதையடுத்து பரமேஷின் உறவினர்கள், படுகாயமடைந்த அனுஷாவை மீட்டு விகாராபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அனுஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள பரமேஷை தேடி வருகின்றனர்.
