* பள்ளி ஆய்வக உதவியாளர் இறந்த வழக்கில் திருப்பம்
* உடந்தையாக இருந்த 4 பேர் உள்பட 6 பேர் கைது
* தனிப்படை போலீசருக்கு ஐ.ஜி. அஸ்ரா கார்க் பாராட்டு
சென்னை: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை, அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தூங்கிக் கொண்டிருந்த தந்தை கழுத்தில் கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து கொலை செய்த மகன்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என்ற 2 மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராகவும் வேலை செய்து வந்துள்ளனர்.
அக்டோபர் மாதம் 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக கூறி அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாம்பு கடித்து இறந்த கணேசன் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது 11 காப்பீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கணேசன் மீது மட்டும் கடந்த 6 மாதங்களில் ரூ.3 கோடி அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது.
இதையடுத்து ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா, நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி ஜெயஸ்ரீ, இன்ஸ்பெக்டர்கள் தங்கதுரை, கஸ்தூரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இவ் வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்தனர். கணேசன் இறந்தால் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலை கிடைக்கும் என இரு மகன்களும் முடிவு செய்து, பாம்பை கடிக்க வைத்து தந்தையை கொன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக இவர்களது நண்பர்கள் பாலாஜி,பிரசாந்த் உதவியுள்ளனர்.
பாம்பு கடித்து தங்களது தந்தை இறந்து விட்டதாகவும் அவருக்கு முறையாக வர வேண்டிய ரூ.3 கோடி காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால், சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருபவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு ரூ.3 கோடிக்கு 4 பாலிசிகள் எடுக்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த இன்சூரன்ஸ் நிறுவனம் வடக்கு மண்டல ஐஜியிடம் இறப்பில் சந்தேகம் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த தனிப்படை, கணேசனின் இரு மகன்களின் செல்போன் உரையாடல்கள் அவர்களின் தொடர்புகள் குறித்து தகவல்கள் சேகரித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் வெளிவந்தன.
மோகன்ராஜ் அவர் தம்பி ஹரிஹரன் இருவரும் கடன் தொல்லையால் சிக்கித் தவித்து வந்ததால் உல்லாச வாழ்க்கை, அரசு வேலைக்கு ஆசைப்பட்டு யாரும் கண்டுபிடிக்காத வகையில் நூதன முறையில் கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக சென்னையில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி வந்த மோகன் ராஜ் அவருடன் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாலாஜி என்பவரின் உதவியை நாடி உள்ளார். பாலாஜி மற்றும் அவரது உறவினர் நவீன் குமார் ஆகியோர் இருளர் இனப் பெண்ணை திருமணம் செய்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை அனுப்பியுள்ளார்.
அவர் அவரது மனைவியின் தந்தை பாம்பு பிடிப்பவர் தினகரன் என்பவருக்கு பண ஆசை காட்டி மணவூர் காட்டுப்பகுதிக்கு சென்று கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து 4 பேரும் காரில் பொதட்டூர்பேட்டையில் உள்ள கணேசன் வீட்டுக்கு எடுத்து வந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கணேசன் கழுத்தில் 3 முறை பாம்பை கடிக்க வைத்துள்ளனர். இதில் விஷம் தலைக்கேறி கணேசன் இறந்ததை உறுதி செய்த பின்னர் பாம்பை அதே இடத்தில் தினகரன் அடித்து போட்டுள்ளார். பிறகு 4 பேரும் காரில் சென்று விட்டனர்.
சிறிது நேரம் கடந்து தங்கள் தந்தை பாம்பு கடித்து விட்டதாக குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்து ஹரிஹரன் மற்றும் மோகன்ராஜ் இருவரும் கணேசனை அங்குள்ள அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். அவர் ஏற்கனவே இறந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பாம்பை வைத்து தந்தையை கடிக்க வைத்து மகன்களே கொன்ற சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* நாகப்பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த கணேசன்
தந்தையை கொலை செய்ய சதி திட்டத்தில் முதல்கட்டமாக அண்ணன், தம்பி இருவரும் கட்டுவிரியன் பாம்பை வைத்து கடிக்க வைப்பதற்கு ஒரு வாரம் முன்பாக அதே ஆட்களை வைத்து நாகப்பாம்பை கொண்டு வந்து கடிக்க வைத்துள்ளனர். ஆனாலும் அவர் பிழைத்துக் கொண்டதால் இந்த முறை கொடிய விஷம் கொண்ட பாம்பான கட்டுவிரியனை கொண்டு வந்து கடிக்க வைத்து இறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சதி திட்டம் போட்டுள்ளனர். அதன்படி இரண்டாவது முறையாக கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை கொண்டு வந்து கழுத்து பகுதியில் கடிக்க வைத்து கணேசன் இறந்ததை உறுதி செய்துள்ளனர்.
* தனிப்படைக்கு ஐஜி, எஸ்.பி பாராட்டு
இந்த வழக்கில் டிஎஸ்பி ஜெய தலைமையிலான தனிப்படை போலீசார் 10 நாட்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்டதால், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், எஸ்.பி விவேகானந்தா சுக்லா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கணேசன் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய அவரது இரண்டு மகன்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், பைக் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
* தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும்போது மோகன்ராஜுடன் பழக்கம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்ராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் திருவாலங்காடு அருகே மணவூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த குணசீலன் என்பவரின் மகன் பாலாஜி (28) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அவரது நண்பர் மணவூரைச் சேர்ந்த பூபாலன் என்பவர் மகன் பிரசாந்த் (35) என்பவரின் மனைவியின் தந்தை ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (43) (பாம்பு பிடிப்பவர்) உதவியுடன் மணவூர் காட்டுப்பகுதியில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை பிடித்துக் கொண்டு வந்து கடிக்க வைத்துள்ளனர்.
* பாம்பை கடிக்க வைக்க கூலி ரூ.1.50 லட்சம்
கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை காட்டில் பிடித்து கொண்டு வந்து கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்து கொலை செய்ய ரூ.1.50 லட்சம் கூலியை மோகன்ராஜ் கொடுத்துள்ளார். இதற்காக மோகன்ராஜ் செல்போனில் இருந்து கூகுள் பே மூலம் நவீன்குமார் என்பவருக்கு ரூ.90 ஆயிரம் அனுப்பியுள்ளார். மேலும் கையில் அறுபதாயிரம் கொடுத்துள்ளார். இப்பணத்தை பாம்பு பிடிப்பவர் தினகரன் மற்றும் அவருடன் செயல்பட்ட 3 பேரும் பிரித்துக் கொண்டுள்ளனர்.
