×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ராஜாங்க கட்டளை அலுவலகத்தில் ரூ.80,000 பணம் கொள்ளை

திருவாரூர்,ஏப்.22: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ராஜாங்க கட்டளை அலுவலத்தின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜபுரம் கோயில் இருந்து வருகிறது. ஆயிரம் வேலி (சுமார் 7 ஆயிரம் ஏக்கர்) பரப்பளவில் இக்கோயிலுக்கு என சொத்துக்கள் உள்ளது. இதில் விவசாய நிலங்கள், காலி மனைகள் மற்றும் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் போன்றவை குத்தகை அடிப்படையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சொத்துக்கள் அனைத்தும் கோயிலின் அபிஷேக கட்டளை, அன்னதான கட்டளை, ராஜாங்க கட்டளை என மொத்தம் 13 கட்டளைகள் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் ராஜாங்க கட்டளை என்பது தருமபுரம் ஆதீனம் கருத்தர் தலைமையின் கீழ் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாரூர் பகுதியில் இயங்கி வரும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளுக்கு வாடகைகள் வசூல் செய்வது மற்றும் ஆதினகர்த்தர் வந்து செல்வதற்கும் என திருவாரூர் தெற்கு வீதியில் அலுவலகம் மற்றும் மடம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 19ம்தேதி இரவு இந்த மடத்தின் அலுவலக பின்பக்க கதவு பூட்டினை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கு ரூ.80 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் காலை அலுவலகத்தின் மேலாளர் அருள் என்பவர் திருவாரூர் டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அங்கு பதிவான சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ஜெகபர் சாதிக் (38) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்தான் திருடியது என தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை நேற்று காலை கைது செய்த போலீசார் திருட்டு போனதொகையினையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ராஜாங்க கட்டளை அலுவலகத்தில் ரூ.80,000 பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Thiruvarur Thyagaraja Swamy Temple's Royal Command Office ,Thiruvarur Thiruvarur Thigaraja Swamy Temple's Royal Command Office ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை